நெல்லிவாசல் நாடு உயர்நிலை பள்ளி முன்பாக வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 
தமிழகம்

உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்த கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து போராட்டம்: நெல்லிவாசல் நாடு பகுதியில் சலசலப்பு

செய்திப்பிரிவு

ஜவ்வாதுமலையில் வனத் துறைக்கு சொந்தமான உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியில் புங்கம் பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு, புதூர்நாடு என 3 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, 35-க்கும் மேற் பட்ட மலை கிராமங்கள் உள்ளன. சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

மலைவாழ் மக்களின் குழந்தை களுக்காக நெல்லிவாசல் நாடு, புதூர் நாடு போன்ற பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான நடு நிலை, உயர்நிலை பள்ளிகள் உள் ளன. இதில், நெல்லிவாசல் நாடு பகுதியில் உள்ள உயர் நிலைப் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், அரசு தரப்பில் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் பொறுமையிழந்த பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பாக திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘நெல்லி வாசல் நாடு பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 266 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு, 9 ஆசிரியர்களும், 1 சிறப்பாசிரியரும் பணியாற்றி வருகின்றனர். மாணவர் களுக்கு தேவையான வகுப்பறை கள், ஆய்வகம், கழிப்பறை, விளை யாட்டு மைதானம், நூலகம் ஆகிய அடிப்படை வசதிகள் உள்ளன.

கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் இப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சிபெற்றனர். 10-ம் வகுப்புக்கு பிறகு மேல்நிலை படிப்பை தொடர வேண்டுமென் றால், இங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவுள்ள புதூர்நாடு பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கோ அல்லது 20 கிலோ மீட்டர் தொலைவுள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அல்லது சிங்காரப்பேட்டை பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு தான் செல்ல வேண்டும்.

நீண்ட தொலைவுக்குத்தான் சென்று மேல்நிலை கல்வியை தொடர வேண்டுமென்பதால் நெல்லிவாசல் நாடு பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் உயர்நிலை கல்வியோடு படிப்பை நிறுத்திவிடுகின்றனர். இதனால், குழந்தை தொழிலாளர்கள் அதிக ரித்து வருகின்றனர். இளம் வயதிலேயே மாணவிகள் திருமணம் செய்துக்கொள்ளும் நிலையும் தொடர்கிறது.

எனவே, நெல்லிவாசல் நாடு பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் எனவும், அதேபோல, தகரகுப்பம் மற்றும் பெரும்பள்ளி கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், புலியூர், தகரகுப்பம், சேம்பரை, நெல்லிவாசல், வலசை, மேல்பட்டு, மலையாண்டிப்பட்டி மலை உள்ளிட்ட 8 மலை கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள்.

நெல்லிவாசல் நாடு உயர்நிலைப் பள்ளியை சுற்றி வனத்துறைக்கு சொந்தமான காலி இடம் ஏராளமாக உள்ளதால், கூடுதல் கட்டிடம் கட்டவும் இடவசதியுள்ளது. எனவே, அரசு எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

கரோனா ஊரடங்கால் கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த 19-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. இந்நிலையில், நெல்லிவாசல் நாடு மலையைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருவதால் அவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாகவும், மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு அதிகாரிகள் மலைப்பகுதிக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்த வில்லை என்பதால், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT