மதுரை மேலமடையில் சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டமதுரை புறநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தை பாஜக மேலிட பார்வையாளர் சி.டி.ரவி இன்று பார்வையிட்டார். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி. 
தமிழகம்

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும்: மதுரையில் பாஜக மேலிடப் பார்வையாளர் சி.டி.ரவி நம்பிக்கை பேட்டி

கி.மகாராஜன்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என பாஜக மேலிட பார்வையாளர் சி.டி.ரவி கூறினார்.

மதுரை பாண்டி கோவில் அருகே பாஜக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மூத்த தலைவர் எச்.ராஜா, துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுச் செயலர் ஸ்ரீநிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர், சி.டி.ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஜன. 29 முதல் 31 வரை தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நட்டாவின் வருகை தமிழகத்தில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.

தமிழகத்தில் இந்தத் தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்று கண்டிப்பாக அதிகாரத்துக்கு வரும் என நம்பிக்கையுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும். பாஜக நடத்திய வெற்றிவேல் யாத்திரை, நம்ம ஊர் பொங்கல் விழாக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இது தவிர தமிழகத்திற்கு மட்டும் பிரதமர் மோடி ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் கோடி அளவுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார். இந்த திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைந்துள்ளது. இதனால் தேர்தலில் பாஜக வெற்றிபெறும்.

இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.

பின்னர் சமீபத்தில் தாக்குதல் நடைபெற்ற மேலமடையில் உள்ள மதுரை புறநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தை சி.டி.ரவி பார்வையிட்டார். மாவட்ட தலைவர் மகா சசீந்திரன், ஊடகப் பிரிவு தலைவர் தங்கவேல்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT