தமிழகம்

எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் புறக்கணிப்பு; நாடாளுமன்றத்தில் போராடுவேன்: திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி

என்.சன்னாசி

எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிராகரிக்கிறது, தொடர்ந்து நிராகரிக்கும் பட்சத்தில் நாடாளுமன்றத்தில் போராட்டம், ரயில் மறியல் நடத்துவோம் என, திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி மதுரையில் கூறினார்.

தேஜஸ் விரைவு ரயில் திண்டுக்கல்லிலும், அமிர்தா விரைவு எக்ஸ்பிரஸ் ரயில் ஒட்டன்சத்திரம் சந்திப்பிலும் நிறுத்தவேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் வேலுச்சாமி (திமுக) மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லெனினிடம் இன்று கோரிக்கை மனு அளித்தார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு எதிர்க்கட்சிகளை முடக்கும் செயலில் ஈடுபடுகிறது. உரிய அங்கீகாரம் வழங்க மறுக்கிறது. மக்களவை உறுப்பினர் என்ற முறையில் ரயில் நிறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளைக் கூட, ஏற்க முடியாத நிலை ரயில்வே நிர்வாகத்தில் நடைமுறையிலுள்ளது.

இந்திய அளவில், நாடாளுமன்றத் தேர்தலில் அதிகளவில் ஓட்டு பெற்றவர்களில் மூன்றாம் இடத்தில் நான் இருக்கிறேன் என்பதற்காக கோரிக்கைகளை மறுக்கலாம். மேலும் பொது மக்களிடம் எங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்பதைத் தடுக்கும் வகையிலும் மத்திய அரசு செயல்படுகிறது.

நாங்கள் எங்களுக்காகப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. பொதுமக்களின் நலனுக்காகவே போராடுகிறோம். இதற்காக தெற்கு ரயில்வே மண்டலம் கோட்ட மேலாளரிடம் மனு அளித்துள்ளோம். மனுவை ஏற்கவில்லை என்றால் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அனைத்து எம்.பி.க்களையும் கூட்டி குரல் கொடுப்பேன்.

அதிலும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால் நாடாளுமன்றம் முன்பு மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்த திட்டமிடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT