தமிழகம்

மதுரவாயல்- வாலாஜா சாலைப் பணி வழக்கு; 50% சுங்கக் கட்டணம் மட்டுமே வசூல்: மார்ச்-11 வரை உயர் நீதிமன்றம் நீட்டிப்பு

செய்திப்பிரிவு

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான சாலை முறையாகப் பராமரிக்கப்படவில்லை என உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து தொடர்ந்த வழக்கில், பணிகள் முடியாததால் ஏற்கெனவே பிறப்பித்திருந்த 50% மட்டுமே சுங்கக் கட்டணம் வசூல் என்ற உத்தரவை மார்ச் 11 வரை நீட்டித்தது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான சாலை முறையாகப் பராமரிக்கப்படவில்லை என 2019-ம் ஆண்டு வந்த கடிதத்தின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, அதை நீதிபதி எம்.சத்தியநராயணன் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சாலையை மீண்டும் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், தற்போதுள்ள பள்ளங்கள் விரைவில் பழுதுபார்க்கப்படும் என்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், சாலைகள் சரிசெய்யப்படும் வரை இரண்டு சுங்கச்சாவடிகளிலும் 50 சதவீதக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இந்த உத்தரவை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டுமென நெடுஞ்சாலை ஆணையத்தின் கோரிக்கையையும் நிராகரித்தது.

இந்த வழக்கு டிசம்பர் 21-ல் விசாரணைக்கு வந்தபோது, லோனாவாலா மற்றும் ஆக்ராவில் உள்ளதுதான் தேசிய நெடுஞ்சாலையா என்றும், மதுரவாயல் - வாலாஜா சாலை எப்போது முதலில் அமைக்கப்பட்டது? எப்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டது? முறையாகப் பராமரிக்காத சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்க எந்தச் சட்டம் வகை செய்கிறது? எனக் கேள்வி எழுப்பியதுடன், இது தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது.

இன்று இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநராயணன், நக்கீரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன் ஆஜரானார். திட்டம் 2003-ல் 4 வழிச் சாலை தொடங்கப்பட்டது என்றும், 6 வழிச் சாலையாக மாற்றத் திட்டமிட்டுப் பணிகள் நடந்து வருவதாகவும், கடந்த ஆண்டைவிட தற்போது சாலை மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிப்ரவரி 15-ம் தேதிக்குள் பராமரிப்புப் பணிகள் முடிவடையும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட மாநில அரசுத் துறைகளிடம் போதிய ஒத்துழைப்பு இல்லை என்றும் வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு நெடுஞ்சாலை ஆணையம் விருப்பப்படும் அதிகாரிகளை வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கும்படி அறிவுறுத்தி, பணிகள் முடிவடையும் வரை 50 சதவீதக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்ற இடைக்கால உத்தரவை மார்ச் 11-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT