திருநெல்வேலி என்று பெயர் வரக்காரணமாக அமைந்த நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் வைபவம் அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இத் திருக்கோயிலில் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா தொடர்ந்து 12 நாள் நடைபெறுகிறது. தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் வீதியுலா நடைபெறுகிறது.
விழாவின் 4 ம் நாள் திருவிழாவான இன்று சுவாமி சன்னதியில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்வு நடைபெற்றது.
முன்னொரு காலத்தில் சிவ பக்தரான வேதபட்டர் வேணுவனம் (திருநெல்வேலி) சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார். வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார்.
இதனால் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜை செய்வதிலும் வேதபட்டருக்கு சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்தார்.
ஒரு நாள் அவர் நெய்வேத்தியத்திற்குரிய நெல்லை காய வைத்து விட்டு குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுவிட்டார். அப்போது மேகம் கருத்து மழை பெய்தது. மழை பெய்ததால் இறைவன் நெய்வேத்தியத்திற்காக காயப்போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே என பதறியபடி கவலையுடன் அவர் கோயிலுக்கு ஓடி வந்தார். ஆனால் அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது.
இதைப் பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னன் நின்ற சீா் நெடுமாறனிடம் தெரிவித்தார். மன்னரும் இந்த அதிசயத்தை கண்டு வியந்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் வேணுவனம் என்று அழைக்கப்பட்ட இவ்வூா் நெல்வேலி என்றும் திரு அடைமொழியுடன் திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது.
இறைவனின் திருவிளையாடலை நினைவுபடுத்தும் வகையில், சுவாமி சன்னதியில் மண்டபத்தின் அருகில் நெல்மணிகள் காய வைக்கப்பட்டது போலவும், மழை பெய்தது போலவும் நிகழ்வுகள் நடைபெற்றன.
தருமபுரம் கட்டளை தம்பிரான் திருஞானசம்பந்தர் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்தி ரதவீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.