பாஜக தலைவர்கள் எத்தனை முறை தமிழகம் வந்தாலும், தமிழகத்தில் தாமரை மலராது என கனிமொழி எம்.பி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி, ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தேர்தல் பிரச்சாரத்தை இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொண்டார்.
சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தில் பனைத் தொழிலாளர்கள், சாயல்குடியில் வர்த்தகர்களுடன், மேலக்கிடாரத்தில் வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவன தொழிலாளர்களுடன் கலந்துரையாடி பிரச்சாரம் மேற்கொண்டார்.
தொடர்ந்து சாயல்குடி உறைகிணறு பகுதியில் மக்கள் கிராம சபைக்கூட்டம், கடலாடி, முதுகுளத்தூரில் திறந்த வெளியில் வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின்போது முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சத்தியமூர்த்தி, நவாஸ் கனி எம்பி, மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
சாயல்குடி மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசியதாவது:
இப்பகுதியில் குடிநீர்ப் பிரச்சினை தொடர்கிறது. சம்பாதிக்கும் ஒரு பகுதியை தண்ணீருக்காக செலவிடுகிறோம் என மகளிர் தெரிவித்தனர்.
அதிமுக ஆட்சியால் குடிநீர் பிரச்சினையைக்கூட தீர்க்க முடியவில்லை. திமுக ஆட்சியில் நரிப்பையூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திட்டம் என்பதால் இத்திட்டத்தை கைவிட்டுவிட்டனர். இதனால் மக்கள் தண்ணீர் கஷ்டத்தை அனுபவிக்கின்றனர்.
காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் அதற்குப்பின் ஆட்சிக்கு வந்த அண்ணா, கருணாநிதி ஆகியோர் மதிய உணவு திட்டத்தை திறம்பட செயல்படுத்தினர். பின்னர் எம்ஜிஆர் சத்துணவு திட்டமாக மாற்றினார். கருணாநிதி சத்துணவில் முட்டை வழங்கி உண்மையான சத்துணவு திட்டமாக மாற்றினார்.
உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின், லட்சக்கணக்கான சுயஉதவிக்குழு பெண்களுக்கு சுழல்நிதி, மானியம் வழங்கினார். ஆனால் இப்போது இந்த இரண்டு நிதியும் நிறுத்தப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி வந்ததும் மீண்டும் கடன், சுழல்நிதி, மானியம் வழங்கப்படும். பெண்களுக்கான வருமானத்தை திமுக ஏற்படுத்தித்தரும். முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள், மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்க அரசிடம் பணம் இல்லை என்கின்றனர். ஆனால் மக்கள் வரிப்பணத்தை கோடிக்கணக்கான ரூபாய் விளம்பரத்திற்காகச் செலவிடுகின்றனர். மீண்டும் இப்பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழகத்தில் 23 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடுகின்றனர். திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட பனை நலவாரியத்தை செயல்படாமல் ஆக்கியுள்ளனர்.
அதிமுக ஆட்சி மீது ஸ்டாலின் குற்றப்பத்திரிகை வைத்துள்ளார். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கஜானாவை காலி செய்யும் அரசாக உள்ளது. கரோனாவை காரணம் காட்டி ஏராளமான ஊழல் செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலச்செல்வனூரில் கனிமொழி எம்.பி செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்கி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவது, அவர்களது படகுகள் உள்ளிட்ட உடமைகள் சேதப்படுத்தப்படுவது தொடர்கிறது.
பிரதமர் இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இந்திய - இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். திமுக ஆட்சி வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
எத்தனை முறை பாஜக தலைவர்கள் தமிழகம் வந்தாலும், தமிழகத்தில் தாமரை மலராது. சேது சமுத்திர திட்டம் நாங்கள் வலியுறுத்தும் திட்டம். நிச்சயமாக தொடர்ந்து வலியுறுத்தும். சசிகலா உடல்நிலை பூரண நலம் பெற வேண்டும் என வேண்டுகிறோம்" எனக் கூறினார்.