விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமானப் பணியின்போது 5-வது தளத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக கட்டிட ஒப்பந்ததாரர் மற்றும் மேற்பார்வையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டு மறியலில் ஈடுபட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. 5 மாடி கட்டிடப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
கட்டுமானப் பணியில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று 5-வது தளத்தில் கான்கிரீட் அமைக்கும் பணி நேற்று காலை நடைபெற்று வந்தது.
அப்பொழுது தடுப்பு சுவர் அருகே நின்று கான்கிரீட் கலவையை எடுத்த போது அங்கிருந்து தவறி கீழே விழுந்து கூரைக்குண்டு பகுதியைச் சேர்ந்த முருகன் (45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுதொடர்பாக கட்டிட ஒப்பந்ததாரரும் ராங்க் புரோஜெக்ட் தனியார் நிறுவன இயக்குநருமான ராஜசேகரன், மேற்பார்வையாளர் பாண்டியராஜன் ஆகியோர் மீது சூலக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், உயிரிழந்த முருகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் கேட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட விருதுநகரைச் சேர்ந்த தமிழ்நாடு நாஜகம்பள நாயக்கர் முன்னேற்றக் கழகத் தலைவர் ரவிக்குமார், துலுக்கப்பட்டியைச் சேர்ந்த தமிழ்நாடு ராஜகம்பள காப்பு பேரவைத் தலைவர் ஆறுமுகசாமி மற்றும் கூரைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் 50 பேர் மீதும் சூலக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.