கும்பகோணத்தில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக புதை சாக்கடை கழிவுநீர் வழிந்தோடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதால், இன்று (22-ம் தேதி) காலை அங்கு சென்ற எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
கும்பகோணம் 40-வது வார்டு மகாமகக் குளம் காந்தியடிகள் சாலையில் கடந்த ஒரு வார காலமாக புதை சாக்கடையிலிருந்து கழிவுநீர் வழிந்தோடி வந்தது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகள், வங்கிகள், குடியிருப்புகளில் உள்ள ஆயிரக்கணக்கானோர் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.
இது தொடர்பாக நகராட்சிக்குப் பலமுறை அப்பகுதி மக்கள் முறையிட்டும், கழிவுநீர் வெளியேறுவது சீரமைக்கப்படவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏவிடம் முறையிட்டனர்.
இதையடுத்து இன்று காலை எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சு.ப.தமிழழகன் ஆகியோர் காந்தியடிகள் சாலைக்குச் சென்று கழிவுநீர் தேங்கிய பகுதியில் நாற்காலியில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கு மேற்கு காவல் நிலைய போலீஸாரும், நகராட்சி அதிகாரிகளும் வந்தனர்.
அவர்களிடம் எம்எல்ஏ, "இந்தக் கழிவு நீர் வெளியேறுவதை எப்போது சீரமைப்பீர்கள்? இதைச் சீரமைக்கும் வரை நான் இந்த இடத்தை விட்டுச் செல்லமாட்டேன்” என உறுதியாகக் கூறினார்.
பின்னர் 30 நிமிடம் கழித்து கழிவு நீர் அடைப்பு சீரமைக்கும் தொழிலாளர்கள் வந்து ஒரு மணி நேரத்தில் அதனைச் சீரமைத்தனர்.
இதுகுறித்து எம்எல்ஏ கூறியதாவது:
''கும்பகோணம் நகரில் பல இடங்களில் புதை சாக்கடை கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்திலேயே இந்த நகராட்சியால் மட்டுமே புதை சாக்கடை அடைப்பைச் சீரமைக்க வாங்கப்பட்ட நவீன இயந்திரம் என்னவானது எனத் தெரியவில்லை. நகராட்சி அதிகாரிகளிடம் குறைகளைச் சொன்னால் தட்டிக் கழிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர்.
காந்தியடிகள் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேலும் அப்பகுதியில் ஏராளமானோர் குடியிருக்கின்றனர். கழிவுநீர் வெளியேறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.
இதைச் சீரமைக்க வேண்டும் என நான் அதிகாரிகளிடம் கேட்டபோது, பத்து நாட்களில் முடித்துவிடுகிறோம் என்றனர். ஆனால், உடனடியாகச் சீரமைப்பை முடித்தால்தான் அங்கிருந்து செல்வேன் எனக் கூறியதால் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுச் சீரமைக்கப்பட்டது''.
இவ்வாறு எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் தெரிவித்தார்.