காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைச் சாலையில் எரித்து பாஜகவினர் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், கடும் நெரிசல் ஏற்பட்டு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மக்கள் தவித்துப் போனார்கள்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் நிறைவேறாத தேர்தல் வாக்குறுதிகளைக் கண்டித்து இந்திரா காந்தி சதுக்கம் முன்பாக காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி நகலை எரிக்கப் போவதாக தெரிவித்திருந்தனர். அத்துடன் ரெட்டியார்பாளையம் போலீஸாரிடம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அனுமதி பெற்றிருந்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் பேசுகையில், "புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி கடந்த பொதுத்தேர்தல் நேரத்தில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை, மாதந்தோறும் இலவச அரிசி, இலவச மின்சாரம் போன்ற பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை நம்ப வைத்து ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸ் ஆட்சி முடியும் வரை எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்துப் போராட்டம் நடத்துகிறோம்" என்று குறிப்பிட்டார்.
மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி நகல்களை டிரம்மில் வைத்து எரித்தனர். இதையடுத்து போலீஸார் அணைக்க முயன்றனர். ஆனால், தடுக்க முடியவில்லை. பல டிரம்களில் தீ கொழுந்துவிட்டு எறிந்ததால் சாலையில் செல்வோர் அச்சமடைந்தனர்.
அதைத் தொடர்ந்து பாஜகவினர் திடீரென்று சாலை மறியலிலும் ஈடுபட்டனர். நகரின் முக்கியப் பகுதியான இந்திரா காந்தி சதுக்கத்தில் மறியலால் விழுப்புரம், கடலூர், சென்னையிலிருந்து வந்த வாகனங்கள் புதுச்சேரிக்குள் செல்ல முடியவில்லை. அதேபோல் புதுச்சேரியில் இருந்து வந்த வாகனங்கள் வெளியே செல்ல முடியவில்லை. நான்கு சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
முக்கியச் சாலைகளாக இருப்பதால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மக்கள் பாதிக்கப்பட்டனர். இப்பகுதிகளில் முக்கிய மருத்துவமனைகள் இருப்பதால் ஆம்புலன்ஸுகளும் சிக்கின. அதற்கு வழி ஏற்படுத்தித் தருவதிலும் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக அரசு குழந்தைகள், பெண்கள் மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்தோர் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். போலீஸார் அங்கிருந்த பாஜகவினரைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.