தமிழகம்

தொடர் மழையால் மூழ்கிக் கிடக்கும் உப்பளங்கள்: தூத்துக்குடியில் தாமதமாகும் நடப்பாண்டு உப்பு உற்பத்தி

ரெ.ஜாய்சன்

கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கின்றன. இதன் காரணமாக இந்த ஆண்டு உப்பு உற்பத்தி ஒரு மாதத்துக்கு மேல் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

உப்பு உற்பத்தி:

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவைகள் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது.

இங்கு வடகிழக்கு பருவமழை டிசம்பரில் முடிவடைந்ததும், ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கும். பிப்ரவரி தொடக்கத்தில் உப்பு உற்பத்தி தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்கள் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலங்கள் ஆகும். அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடிவடையும். இது தான் ஆண்டு தோறும் நடைபெறும் நடைமுறை.

மழையால் தாமதம்:

ஆனால், இந்த ஆண்டு பருவம் தப்பி பெய்த தொடர் மழையால் உப்பு உற்பத்தி தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாதம் தொடக்கத்தில் 10 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரம் ஏக்கர் உப்பளங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த மழைநீர் வடிந்த பிறகே உப்பளங்களில் உப்பு உற்பத்திகான ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்க முடியும். அதன் பிறகு ஒரு மாதம் கழித்தே உப்பு உற்பத்தி தொடங்கும் என்கின்றனர் உப்பு உற்பத்தியாளர்கள்.

இது குறித்து தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஏ.ஆர்.ஏ.எஸ்.தனபாலன் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை ஜனவரி மாத தொடக்கத்தில் உப்பு உற்பத்திக்காக உப்பங்களை தயார்படுத்தும் பணிகள் தொடங்கும். ஜனவரி கடைசியில் அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் உப்பு உற்பத்தி வரத் தொடங்கும்.

ஆனால், இந்த ஆண்டு தொடர் மழை காரணமாக உப்பளங்களில் பெருமளவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழை வெள்ளம் வடிந்த பிறகே உப்பளங்களை தயார்படுத்த முடியும். இனிமேல் மழை எதுவும் பெய்யாமல் இதே வானிலை நீடித்தால் பிப்ரவரி தொடக்கத்தில் தான் உப்பளங்களை தயார் படுத்தும் பணிகளை தொடங்க முடியும்.

எனவே, மார்ச் 10-ம் தேதிக்கு பிறகு தான் உப்பு உற்பத்தி தொடங்கும். இந்த ஆண்டு உப்பு உற்பத்தி ஒரு மாதம் முதல் ஒன்றரை மாதம் வரை தாமதமாகும். இடையில் மீண்டும் மழை பெய்தால் இது மேலும் தாமதமாகும்.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு மேல் தாமதமானது. இதனால் உப்பு உற்பத்தி கூடுதலாக ஒரு மாதம் நடைபெற்றுள்ளது.

இதன் காரணமாக கடந்த ஆண்டில் மாவட்டத்தில் 90 சதவீதம், அதாவது 22.5 லட்சம் டன் உப்பு உற்பத்தியானது. அதில் பெரும்பாலான உப்பு காலியாகிவிட்டது. தற்போது சுமார் 4 லட்சம் டன் அளவிலான உப்பு மட்டுமே உப்பளங்களில் கையிருப்பில் உள்ளது.

இது பிப்ரவரி மாதம் வரை போதுமானதாக இருக்கும். மார்ச் தொடக்கத்தில் புதிய உப்பு வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். இல்லையெனில் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும். தற்போது உப்பு தரத்தை பொறுத்து ஒரு டன் ரூ.1500 முதல் ரூ.2000 வரை விற்பனையாகிறது. உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டால் இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்றார் அவர்.

SCROLL FOR NEXT