ஓசூர் பூனப்பள்ளி கிராமத்தில் கடும் பனியில் கருகல் நோய் தாக்கியுள்ள பட்டன் ரோஜா மலர்களைக் காட்டும் விவசாயி | படங்கள்: ஜோதி ரவிசுகுமார். 
தமிழகம்

ஓசூரில் கடும் பனிப்பொழிவு: பட்டன் ரோஜா உற்பத்தி 50% பாதிப்பு- விவசாயிகள் கவலை

ஜோதி ரவிசுகுமார்

நடப்பாண்டில் அதிகமான பனிப்பொழிவு காரணமாக ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டன் ரோஜா மலர்களில் சாம்பல் நோய், கருகல் நோய் தாக்கத்தினால் 50 சதவீத அளவுக்கு உற்பத்தி குறைந்துள்ளது. நோய்த் தடுப்புக்கான மருந்துச் செலவு இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதால் பட்டன் ரோஜா மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஓசூர், பாகலூர், தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் சாகுபடிக்கு ஏற்ற வகையில் தரமான மண் வளத்துடன் குளுமையான தட்பவெப்ப நிலை நிலவுகிறது. இதனால் ஆண்டு முழுவதும் இப்பகுதியில் மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு, லாபம் ஈட்டி வருகின்றனர்.

குறிப்பாக இங்கு விளையும் தரமான பட்டன் ரோஜா மலர் வகைகள் தினமும் சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கும், பெங்களூரு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடப்பாண்டில் ஓசூர் பகுதியில் வழக்கத்தை விடப் பனிப்பொழிவு அதிகமாகக் காணப்படுவதால் பட்டன் ரோஜா மலர்களில் சாம்பல் நோய், மொட்டு கருகல் உள்ளிட்ட நோய்த் தாக்கத்தினால் உற்பத்தி பாதியாகக் குறைந்துள்ளது. இதனால் மலர் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்துத் தளி விவசாயி வெங்கடேஷ் கூறும்போது, ''இப்பகுதியில் விளையும் தரமான பட்டன் ரோஜா மலர்களுக்கு சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மிகுந்த வரவேற்பு உள்ளது. சொட்டுநீர்ப் பாசன வசதியைப் பயன்படுத்தித் தொடர்ந்து பட்டன் ரோஜா மலர்கள் பயிரிட்டு வருகிறோம். கடந்த 3 மாதங்களாக அதிகப்படியான பனிப்பொழிவினால் பட்டன் ரோஜா மலர்களில் நோய்த் தாக்கம் அதிரித்துள்ளது.

மருந்துத் தெளிப்பு செலவு ஒரு ஏக்கருக்கு மாதம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வரை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

மலர் பறிப்புக் கூலி, சந்தைக்குக் கொண்டுசெல்லும் வாகனச் செலவு ஆகியவையும் அதிகரித்துள்ளன. இடையில் சில நாட்கள் மட்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ பட்டன் ரோஜா ரூ.150 வரை விற்பனையானது. அதன்பிறகு மீண்டும் விலை ரூ.40, ரூ.50 எனக் குறைந்துவிட்டது. பனிப்பொழிவு காரணமாக உற்பத்தியும் குறைந்து, சரியான விலையும் இன்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவித்தார்.

இதுகுறித்து ஓசூர் பூனப்பள்ளி கிராமத்தில் பட்டன் ரோஜா பயிரிட்டுள்ள விவசாயி நாகராஜ் கூறும்போது, ''கடந்த 20 ஆண்டுகளாக பட்டன் ரோஜா பயிரிட்டு வருகிறேன். ஒரு ஏக்கர் பட்டன் ரோஜா பயிரிட சுமார் 2,750 நாற்றுகள் தேவைப்படுகின்றன. தேன்கனிக்கோட்டை அகலக்கோட்டை மலைக்கிராமத்தில் இருந்து ஒரு பட்டன் ரோஜா நாற்று ரூ.12 என்ற விலையில் வாங்கி வருகிறோம்.

ஒரு ஏக்கர் பரப்பளவில் 7 அடி இடைவெளியில் 35 முதல் 40 வரிசைகள் அமைத்து, ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் 1.75 அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 3 மாதங்களில் பட்டன் ரோஜா அறுவடைக்குத் தயாராகி விடும்.

இந்த பட்டன் ரோஜாச் செடிகளைச் சொட்டுநீர்ப் பாசனம் மூலமாக முறையாகப் பராமரித்து வந்தால் 6 முதல் 7 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாகப் பலன் கொடுக்கும். ஆரம்பத்தில் ஒரு ஏக்கர் பட்டன் ரோஜா தோட்டம் அமைக்க ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவாகிறது. குளிர் காலத்தில் பராமரிப்புச் செலவு இரண்டு மூன்று மடங்காக உயர்ந்து விடுகிறது. பொதுவாக பட்டன் ரோஜா தோட்டத்துக்கு ஒரு மாதத்தில் 4 முறை மருந்து அடிக்க வேண்டும்.

குளிர்காலத்தில் நோய்த் தாக்கம் அதிகமுள்ளதால் ஒரு மாதத்துக்கு 6 அல்லது 7 முறை மருந்து அடிக்க வேண்டியுள்ளது. இப்பகுதியில் அதிகமாக மெராபிள் ரகத்தை (சிவப்பு பட்டன் ரோஜா) பயிரிட்டு வருகிறோம். இந்த ரகப் பூக்கள் ஏற்றுமதி பார்சலில் 3 நாட்கள் வரை தாக்குப்பிடிக்கக் கூடியவை'' என்று தெரிவித்தார்.

இதுகுறித்து சூளகிரி தோட்டக்கலைத் துறை உதவி வேளாண்மை அலுவலர் தமிழ்வேந்தன் கூறும்போது, ''ஓசூர் ஒன்றியத்தில் மொத்தம் 300 ஹெக்டேர் பரப்பளவில் பட்டன் ரோஜா பயிரிடப்பட்டுள்ளது. இவற்றுடன் சூளகிரி, தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய ஒன்றியங்களிலும் விவசாயிகள் அதிக பரப்பளவில் பட்டன் ரோஜா பயிரிட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் அதிகமான பனிப்பொழிவு காரணமாக பட்டன் ரோஜா மலர்களில் சாம்பல் நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிகப் பனியால் மலர்கள் மொட்டுகளிலேயே கருகி விடுகின்றன. இதனால் இப்பகுதியில் 50 சதவீதம் வரை பட்டன் ரோஜா மலர்களின் உற்பத்தி குறைந்துள்ளது'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT