தமிழகத்தை கடந்த ஆண்டு தாக்கிய நிவர், புரெவி புயல்களால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணமாக ரூ.592 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், அதில் ரூ.510 கோடி விவசாயிகள் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் நிவர், புரெவி புயல்கள் தாக்கின. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டாலும், வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
தொடர்ந்து, இந்த ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் பெய்த எதிர்பாராத கனமழையால் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின. இதனால் ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், நிவர், புரெவி புயல் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக முதல்வர் பழனிசாமி கடந்த 2-ம் தேதி ஓர் அறிவிப்பு வெளியிட்டார். அதில், ‘‘தேசிய பேரிடர் நிவாரண நிதியின் வழிகாட்டு நெறிமுறைகள்படி, மானாவாரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற நெற்பயிர்கள், இதர பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு வழங்கப்படும் ரூ.13,500 இடுபொருள் நிவாரணம் ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும். மானாவாரி நெற்பயிர் தவிர அனைத்து மானாவாரி பயிர் களுக்கும் இடுபொருள் நிவாரணம் ஹெக்டேருக்கு ரூ.7,410-ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். பல்லாண்டு கால பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.18 ஆயிரம் என்பது ரூ.25 ஆயிரமாகவும் வழங்கப்படும். இடுபொருள் நிவாரணத்துக்கான தொகையை தமிழக அரசு வழங்கும்’’ என்று அறிவித்தார்.
நிவர் நிவாரணம்
இந்நிலையில், பயிர் பாதிப்புகள் கணக்கெடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில், நிவர் புயல் தாக்கியபோது 33 சதவீதத்துக்கு மேல் 12,863 ஹெக்டேர் வேளாண்பயிர்கள், 3,814 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. இதில், வேளாண் பயிர்களுக்கு ரூ.19.95கோடி, தோட்டக்கலை பயிர்களுக்கு ரூ.6.65 கோடி என மொத்தம் ரூ.26.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
புரெவி நிவாரணம்
நிவர் புயலை தொடர்ந்து புரெவி புயல் டிசம்பர் 2 முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தின் தென் மாவட்டங்கள், உள்மாவட் டங்களில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து பாதிப்புகள் கணக்கிடப்பட்டன. அதன்படி 2.64 லட்சம் ஹெக்டேர் வேளாண்பயிர்கள், 15,661 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்கள் கண்டறியப் பட்டன. மேலும் 2 ஹெக்டேருக்கு மேல் பாதிக்கப்பட்ட 13,792 ஹெக்டேர் நிலங்களும் கணக்கில் எடுக்கப்பட்டன. இவற்றுக்கு நிவாரணமாக வேளாண் பயிர்களுக்கு ரூ.510.56 கோடி மற்றும்2 ஹெக்டேருக்கு மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.27.59 கோடி என ரூ.538.15 கோடி மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கான நிவாரணம் ரூ.27.30 கோடி என ரூ.565.46 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இவ்வாறு நிவர், புரெவி புயல்களுக்கான நிவாரணமாக ரூ.592 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து தற்போது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நிவாரணத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது.
18 மாவட்டங்களில்
விவசாயிகளுக்கான நிவாரணம் விடுவிக்கப்படுவது குறித்து தமிழக வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:
நிவர், புரெவி புயல்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.592 கோடியில் தற்போது வரை ரூ.510 கோடி விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள தொகை தொடர்ந்து வரவுவைக்கப்பட்டு வருகிறது.
முதல்கட்ட கணக்கெடுப்பில் ஜனவரி மாத மழை பாதிப்பு 4.5 லட்சம் ஹெக்டேர் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து 18 மாவட்டங்களில் தற்போது கணக்கெடுப்பு நடக்கிறது. வரும் 29-ம் தேதிக்குள் பணிகளை முடித்து, அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். அதன்படி விரைவில் நிவாரணம் வழங் கப்படும். இதுதவிர, பயிர் காப் பீட்டுத் தொகையையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.