ஆயுர்வேதம் படித்துவிட்டு டாக்டராக பணியாற்றியவரை போலி டாக்டர் எனக் கருதி கைது செய்ததற்கு இந்திய ஆயுர்வேத டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி போலி டாக்டர்களை கண்டுபிடித்து போலீஸில் ஒப்படைத்து வருகின்றனர். ஆயுர்வேதம் படித்துவிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்கில (அலோபதி) மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வந்த மகேஷ்வரன் என்பவரை கடந்த வாரம் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் ஆயுர்வேத டாக்டரை கைது செய்ததற்கு இந்திய ஆயுர்வேத மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் தாமரை மணாளன் கூறியதாவது:
அவசர தேவைக்கும், முதலுதவிக்கும் இந்திய மருத்துவ முறை படிப்புகளான சித்தா, ஆயுர்வேத, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஓமியோபதி படித்தவர்கள் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிக்கலாம் என்று மத்திய இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது. தமிழக அரசும் அரசாணை வெளியிட்டுள்ளது.
அப்படி இருக்கும்போது ஆயுர்வேதம் படித்த டாக்டரை போலி டாக்டர் என்று கைது செய்தது கண்டிக்கத்தக்கது. இதனைக் கண்டித்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிட திட்டமிட்டு இருந்தோம். சுகாதாரத்துறை செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதால் முற்றுகையை கைவிட்டோம் என்று அவர் தெரிவித்தார்.