தமிழகம்

பயன்தரும் மரங்களால் பசுமையாகும் கிராமங்கள்: மாதம் 50 மரக்கன்று நட இளைஞர்கள் குழு முடிவு

ஆர்.கிருபாகரன்

திருப்பூர் அருகே உள்ள வாவிபாளையம் கிராமத்தில், சீமைக் கருவேல மரங்களால் தரிசாகிக் கிடந்த இடங்களைத் தூர்வாரி, பயன் தரும் மரங்களை வைத்து பசுமைக் காடாக மாற்றும் முயற்சியில் கிராம இளைஞர்கள் குழு இறங்கியுள்ளது.

நகரம் என்றால் கட்டிட ஆக்கிரமிப்பும், கிராமம் என்றால் கருவேல ஆக்கிரமிப்பும் அடையாளமாகவே மாறியுள்ளது. நீர், நிலம், காற்று என இயற்கை பரவிக் கிடக்கும் கிராமங்களை சீமைக்கருவேல மரங்கள் வறட்சியில் தள்ளிக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட கிராமங்களில் ஒன்றுதான் கோவை மாவட்ட எல்லையில் இருக்கும் வாவிபாளையம் கிராமம். வறட்சி எட்டிப் பார்க்கும் முன்பாக சுதாரித்து செயல்படத் தொடங்கியுள்ளனர் இங்குள்ள இளைஞர்கள்.

திருப்பூர் மாவட்ட எல்லைக்குள் வரும் இவ்வூராட்சியில் வாவிபாளையம், கோட்டைப்பளையம், மந்திரிபாளையம், முத்தூர், கொசவம்பாளையம், கழுவேறிபாளையம், பழனிக்கவுண்டம்பாளையம், காளியப்ப கவுண்டன்புதூர் என சுமார் 10 கிராமங்கள் உள்ளன. பருவத்துக்கு பெய்யும் மழையும், பிஏபி பாசனமும் மட்டுமே இங்கு கிடைக்கும் நீராதாரம். சீமைக்கருவேல மரங்களினால் இருக்கும் கொஞ்ச நஞ்ச நீராதாரமும் கைதவறிப் போய்விடக்கூடாது என்ற மனநிலை இங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

‘களைகளை ஒழிக்கும் களைக்கொல்லி போல’ சீமைக்கருவேல மரங்களுக்கு பதிலாக அவை இருந்த இடத்தில் எல்லாம் பயன் தரும் பலவகை மரங்களை நட்டு வளர்க்கத் தொடங்கியுள்ளனர். ‘வளமிகு வாவிபாளையம் ஊராட்சி- பசுமை கிராமத் திட்டம்’ என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவாக சுமார் 15 பேர் கொண்ட குழுவாக இப்பசுமைப் பணியை கடந்த ஜூன் மாதம் தொடங்கினர். சாதாரணமாக தொடங்கி இதுவரை சுமார் 900 மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரிக்கவும் தொடங்கியுள்ளனர்.

அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கூறும்போது, ‘பல வருடங்களாக மரங்களை வளர்க்க வேண்டும், கிராமத்தையே பசுமையாக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. ஆனால் சரியான இடம் கிடைக்கவில்லை. கிராமத்தின் மேற்குப் பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து கிடந்த சுமார் 3 ஏக்கர் நிலத்தை சுத்தப்படுத்தி, மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். தரிசாக கிடந்த இடங்களில் அதன் உரிமையாளர்களிடம் பேசி மரங்களை வளர்க்கிறோம். மரக்கன்று நடுவதை விட, அதை பராமரிப்பது முக்கியம். கருவேல மரங்களை வெட்டி இடத்தை தூர்வாரவும், மரக்கன்றுகள் வாங்கவும், தினசரி தண்ணீர் பாய்ச்சவும், பராமரிக்கவும் தங்களால் முடிந்த நிதியுதவி, பொருளுதவி, பணியுதவி என கிராம மக்கள் அனைவருமே பங்களிப்பைக் கொடுக்கிறார்கள்’ என்கின்றனர்.

ஊராட்சித் தலைவர் பார்த்தசாரதி கூறும்போது, ‘சீமைக்கருவேல மரங்களை முழுவதுமாக ஒழித்து, மரங்களை அதிகப்படுத்தும் நோக்கில் இத்திட்டத்தை இளைஞர்கள் கையில் எடுத்துள்ளனர். இதுவரை 3 கிராமங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கிறோம். இனி அந்தந்த கிராமங்களில் உள்ள இளைஞர்களை வைத்தே இத்திட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம்’ என்றார்.

மரங்களுக்கு முறையான சொட்டுநீர் பாசன நீராதாரத்தை ஏற்படுத்தி, மாதம் 50 புதிய மரக்கன்றுகளை வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இந்த இளைஞர்கள் குழு பணியாற்றி வருகிறது. இவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வால், அப்பகுதியில் உள்ள மற்ற கிராமங்களிலும் மரங்களை நேசிக்கும் பழக்கம் வேகமாக வேரூன்றி வருகிறது.

SCROLL FOR NEXT