மதுரை மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் 45 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இது கடந்த ஆண்டை விட குறைவு என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த காலத்தில் தமிழகத்திலேயே டெங்கு காய்ச்சல் பாதிப்பு மதுரையில் அதிகமாகக் காணப்பட்டது.
தமிழகத்தில் சமீப காலமாக ஒரளவு டெங்கு காய்ச்சல் குறைந்துள்ளது. இருந்தும், நடப்பு ஆண்டு இதுவரை 45 பேருக்க டெங்கு காய்ச்சல் வந்துள்ளது சுகாதாரத்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த ஆண்டு இதே ஜனவரி மாதத்தில் 102 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘2021ம் ஆண்டில் இதுவரை மாவட்டத்தில் 45 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறிப்பட்டுள்ளது.
நகர்ப்பகுதியில் 20 பேருக்கும், புறநகர் கிராமங்களில் 25 பேருக்கு இந்த காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டில் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 279 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இதே நாளில் டெங்கு காய்ச்சல் அதிகமானோருக்கு இருந்தது, ’’ என்றார்.