தமிழகம்

தேர்தல் வெற்றிக்கான பணிகளை தொடங்குங்கள்: அதிமுகவினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள்

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கான பணிகளை ஆண்டுவிழா கொண்டாட்டத்திலேயே தொடங்குங்கள் என கட்சியினருக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் அதிமுக தொடங்கப்பட்டு 43 ஆண்டுகள் முடிந்து, இன்று 44-ம் ஆண்டு தொடங்குகிறது. முதல்வர் ஜெயலலிதா, கோத்தகிரியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, விழா மலரை வெளியிடுகிறார்.

இந்நிலையில், ஆண்டு விழா தொடர்பாக அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இந்திய அரசியலில் தன்னிகரற்ற பேரியக்கமாக ஒளி வீசும் அதிமுகவின் 44- வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு உங்களை கடிதம் வழியாக சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

'தீய சக்தியின் அராஜகம், ஊழல், சூறையாடல் மற்றும் ஒழுக்க கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உங்களால் மட்டும் தான் முடியும்' என்ற தமிழக மக்களின் அழைப்பை ஏற்று எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட மக்கள் இயக்கம் தான் அதிமுக.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின், அதிமுகவை அழிக்க துடித்த அரசியல் எதிரிகளால் பல்வேறு சோதனைகள், சூழ்ச்சிகள், சதிகளை நான் சந்திக்க நேர்ந்தது. இது என்றும் மக்கள் இயக்கமாக திகழ வேண்டும் என்பதற்காக நான் அனைத்து சோதனைகளையும் மன உறுதியுடன் ஏற்று பாடுபட்டு வருகிறேன்.

எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு, எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை. நான் வாழ்வது இந்த இயக்கம் மற்றும் தமிழக மக்களுக்காக தான். தமிழக மக்களின் மகிழ்ச்சி தான் என் லட்சியம். இறைவன் எனக்கு விடுத்த அழைப்பாக இந்த வாழ்வை நான் மனப்பூர்வமாக ஏற்கிறேன்.

சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் உயர்வடைய செய்து வரும் மன நிறைவுடன் அதிமுகவின் ஆண்டு விழாவை கொண்டாடுகிறோம்.

அதிமுக தொடர்ந்து பல்வேறு அரசியல் வெற்றிகளை குவிக்க வேண்டும். அதற்கான பெரும் பொறுப்பு நமக்கு உண்டு. அடுத்து வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் இதற்கு முன் பெற்ற வெற்றிகளைக் காட்டிலும் பெரிய வெற்றியை அதிமுக பெற வேண்டும். இதை நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து சூளுரை ஏற்கும் தருணமாக இந்த ஆண்டு விழாக் கொண்டாடங்கள் அமைய வேண்டும்.

இந்த அரசு துறை தோறும் ஆற்றிவரும் பணிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அனைவரும் மகிழும் வண்ணம் மக்களுக்கு தொண்டாற்றுங்கள். உங்கள் பணிகளை நேர்மையாகவும், திறமையாகவும் செய்யுங்கள். அதிமுகவிற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் உங்கள் பணி அமையட்டும்.

வெற்றி ஒன்றே நம் குறிக்கோள் என்பதை நினைவில் கொண்டு பணியாற்றுங்கள். வெற்றிக்கான பணிகள் அனைத்தையும் இந்த ஆண்டுவிழா கொண்டாட்டத்திலேயே தொடங்கிடுங்கள்.

இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT