தற்போது தமிழ்நாட்டில் உள்ள முக்கியத் துறைமுகங்கள் ஆண்டுக்கு 253.9 மில்லியன் டன்கள் சரக்குகள் பரிமாற்றம் செய்யும் திறன் கொண்டிருக்கிறது. ஆனால் 2019-20 ஆம் ஆண்டு வரை 114.9 மில்லியன் டன்கள் சரக்குகள் தான் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 55 சதவீத துறைமுகம் பயன்படுத்தாமல் கிடக்கும் நிலையில் ரூபாய் 53 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்வதில் ஆர்வம் காட்டுவது எதற்காக என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் அருகில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை அதானி நிறுவனத்திற்கு கொடுப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
இத்திட்டத்திற்கு காட்டுப்பள்ளி சுற்றுவட்டாரப் பொதுமக்கள், மீனவர் குடும்பங்கள், சூழலியல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்தள்ளனர். இதனைத் தொடர்ந்து நாளை (22.01.2021) நடைபெறவிருந்த பொது விசாரணை மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடலோரப்பகுதியில் ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் மண் நிரப்பி சுமார் ஆயிரத்து 970 ஏக்கர் பரப்புளவு தளம் உருவாக்குவது என்பது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். பழவேற்காடு உவர் நீர் மண்டலம் அழிந்து போகும் என்ற சூழலியலாளர்கள் கூறுவதையும், எண்பதுக்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள் வாழ்வாதாரம் இழக்கும்.
அரசு நிலத்தில் சாகுபடி செய்து வரும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர் குடும்பங்கள் முற்றிலுமாக புலம் பெயர்ந்து செல்லும் அவலம் ஏற்படும் என்பதை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது தமிழ்நாட்டில் உள்ள முக்கியத் துறைமுகங்கள் ஆண்டுக்கு 253.9 மில்லியன் டன்கள் சரக்குகள் பரிமாற்றம் செய்யும் திறன் கொண்டிருக்கிறது. ஆனால் 2019-20 ஆம் ஆண்டு வரை 114.9 மில்லியன் டன்கள் சரக்குகள் தான் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 55 சதவீத துறைமுகம் பயன்படுத்தாமல் கிடக்கும் நிலையில் ரூபாய் 53 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்வதில் ஆர்வம் காட்டுவது எதற்காக (?) என்பதை மக்கள் அறிந்த செய்திதான்.
மத்திய பாஜக அரசு, பிரதமர் மோடியின் நெஞ்சுக்கு நெருக்கமான நண்பர் அதானி குடும்பத்திற்கு தமிழ்நாட்டின் கடலோர நிலத்தை எடுத்துக் கொடுக்கவே தாராளமயக் கொள்கையை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. மத்திய பாஜக அரசின் வஞ்சக வலையில் வீழ்ந்து கிடக்கும் அதிமுக மாநில உரிமைகளையும், மக்கள் வாழ்வுரிமையினையும் பலி கொடுத்து வருகிறது.
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதச் செயல்களை எதிர்த்து அனைவரும் ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது”.
இவ்வாறு முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.