தமிழகம்

கோவை மாவட்டத் தொழில் மையம், தொழில் கூட்டமைப்புகள் இணைந்து நடத்தும் சுயதொழில் கடன் மேளா: பொள்ளாச்சியில் நாளை நடக்கிறது

செய்திப்பிரிவு

கோவை மாவட்டத் தொழில் மையம், தொழில் கூட்டமைப்புகள் இணைந்து பொள்ளாச்சியில் நாளை (ஜன.22) சுய தொழில் கடன் மேளாவை நடத்த உள்ளன.

இதுதொடர்பாகக் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவையில் நகர்ப் புறம், கிராமப் புறங்களில் தொழில்முனைவோரை உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சுயதொழில் தொடங்குவதற்கு, புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS), வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் (UYEGP), பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் (PMEGP) ஆகிய 3 பிரதான சுயதொழில் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

பொள்ளாச்சி தென்னை, சுற்றுலா சார்ந்த தொழில்களுக்கும், பொது வர்த்தம், பொறியியல் தொழில்களுக்கும் அதிக வாய்ப்புள்ள இடமாகும். எனவே, மேற்கண்ட கடன் திட்டங்களுக்கான சிறப்பு லோன் மேளா மற்றும் விழிப்புணர்வு முகாம் 22-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, பொள்ளாச்சி ராமையாகவுண்டர் காலனி, சிடிசி டிப்போ பின்புறம் உள்ள பொள்ளாச்சி தொழில் வர்த்தகச் சபைக் கட்டிடத்தில் நடைபெற உள்ளது.

கடன் மேளாவுக்கு வருபவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்று (35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்), விலைப் பட்டியல் (Quotation) மற்றும் திட்ட அறிக்கை அசல் ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும். பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் தொழில் தொடங்க ஆர்வம் உள்ளோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT