நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள வேளச்சேரி ஏரியை சூழ்ந்துள்ள கழிவுகளை அகற்றவும், வீராங்கல் ஓடை சீரமைக்கும் பணிகள் நிறைவுறாததை கண்டித்து திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துக்கொண்டனர்.
இதுகுறித்து திமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
“வேளச்சேரியா? வெள்ளச்சேரியா? ஏரியை சீரமைக்க திமுக ஆர்ப்பாட்டம் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50 ஆயிரம் பேர் திரண்டனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, "வேளச்சேரியா? வெள்ளச்சேரியா?" எனும் வினாவோடு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று (21-1-2021) காலை 10 மணியளவில் வேளச்சேரி காந்தி சாலையில் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏறத்தாழ 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பொதுநல சங்கத்தை சார்ந்தவர்களை ஒருங்கிணைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமாக நடத்தப்பட்டது.
நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள வேளச்சேரி ஏரியை சூழ்ந்துள்ள கழிவுகளை அகற்றி, இந்த ஏரியையும் சேத்துப்பட்டு ஏரியையும் அழகுபடுத்தி, படகு போக்குவரத்துடன் கூடிய சுற்றுலாத்தலமாக மாற்றும் பணிகள் திமுகழக ஆட்சியில் தொடங்கப்பட்டது. சேத்துப்பட்டு ஏரி மட்டுமே பணிகள் முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில், வேளச்சேரி ஏரிக்கு வரும் கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு புதிய பாதைகள் அமைக்கப்பட்டது. அதற்கு பிறகு கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்த பணியும் நடைபெறாமல் உள்ளது.
2018-ம் ஆண்டு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி அந்த ஏரியை சீரமைக்க 25 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தார். இரண்டு வருடங்கள் கழிந்தும் ஏரியை சீரமைக்கும் பணிகள் துவங்கப்படவில்லை. அதேபோல் திமுக ஆட்சியில் வீராங்கல் ஓடை சீரமைக்கும் பணிகள் இருபது சதவீதம் நிறைவுற்றது. நூறு கோடி ரூபாய்க்கும் மேலான வீராங்கல் ஓடையை ஆழப்படுத்தி, இருபுறமும் கான்கிரீட் தடுப்புகள் கட்டும் திட்டம் கடந்த பத்தாண்டுகளில் ஒரு சில இடங்களில் மட்டுமே துவங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த பருவ மழைகாலத்தில் வேளச்சேரி மிகப்பெரிய வெள்ள பாதிப்புக்குள்ளானது. வாரக்கணக்கில் மழைநீர் தேங்கி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே, இதை கவனிக்காத அதிமுக அரசை கண்டித்து இந்த கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் வாகை சந்திரசேகர், எஸ்.அரவிந்த்ரமேஷ், திமுக மகளிரணி, இளைஞரணி நிர்வாகிகள் உள்ளிட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், திமுகவினர், பொதுநலச் சங்கத்தினர் பெருந்திரளாக இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தம் எதிர்ப்பை பதிவு செய்தனர்”.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.