காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் அமைக்கப்படும் தடுப்புச் சுவர் (கோப்பு படம்). 
தமிழகம்

வேகமெடுக்கும் வேகவதி ஆறு சீரமைப்பு பணி: கரையோர மக்களுக்கு மாற்று வீடுகள்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேகவதிஆறு சீரமைக்கும் பணி வேகமெடுத்துள்ளது. ஆற்றின் கரையில் இருக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்ற மாற்று வீடுகள் வழங்கப்படுவதுடன், குறுகலான பகுதிகளில் இருந்து நீர்வெளியேறுவதை தடுக்க தடுப்புச்சுவர் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் நகரப் பகுதிக்குள் வேகவதி ஆறு பாய்கிறது. ஏரியில் உள்ள கலங்கள் பகுதியில் உற்பத்தியாகி காஞ்சி நகரம் வழியாகப் பாய்ந்து திம்மராஜம்பேட்டையில் பாலாற்றில் கலக்கிறது. 26 கி.மீ. நீளம் உள்ள வேகவதி ஆற்றில் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட கனமழையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது இந்த ஆற்றின் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் வெள்ளநீர் அருகில் இருந்த குடியிருப்புகளுக்குள் நுழைந்தது.

இதைத் தொடர்ந்து வேகவதி ஆற்றுப் பகுதியில் பொதுப்பணித் துறை அளவீடு செய்து, 1,418 வீடுகள் ஆற்றுப் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்ற அனைத்து வீட்டினருக்கும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டபோது, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சில அரசியல் கட்சியினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஆற்றை ஆக்கிரமித்து வீடுகட்டி குடியிருப்போருக்கு மாற்று இடம் வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு, குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக கீழ்கதிர்பூர் கிராமத்தில் 17 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு, ரூ.150 கோடி மதிப்பில் 2,112 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த வீடுகளின் கட்டுமானப் பணிகள் பூர்த்தியான நிலையில், வீடுகளை ஒப்படைக்கும் பணிகள்தொடங்கியுள்ளன. இதற்காக கடந்த ஒரு வாரமாக வேகவதி ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்களுக்கு கைரேகை அடையாளங்கள் பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் கேட்டபோது, “முதல்கட்டமாக வேகவதிஆற்றின் கரையோரம் இருக்கும்மக்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டதும் அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மேலும் ஆறுகள்குறுகியதாக உள்ள பகுதிகளில் குடியிருப்புக்குள் நீர் நுழையாதவாறு தடுப்புச் சுவர் அமைக்கப்படும். அதற்கான நிதியை அரசிடம் கேட்க உள்ளோம்” என்றனர்.

வேகவதி ஆறு நகர்புறத்தில் உள்ளதால் அதிக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளது. தற்போது அந்த ஆக்கிரமிப்பை அகற்றி தடுப்புச் சுவர் அமைக்கும் நடவடிக்கை தொடங்கப்பட உள்ளது. வேகவதி ஆற்றை சீரமைக்கும் பணி வேகம் எடுத்தைத் தொடர்ந்து அந்த ஆற்றை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT