திருவான்மியூர், தண்டையார் பேட்டையில் 3 பெண்களிடம் செயின்கள் பறிக்கப்பட்டன. ஆட்டோவில் தப்பிய 4 பேரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
சென்னை திருவான்மியூர் எல்.பி.சாலையில் நேற்று முன்தினம் இரவு பெண் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த கும்பல் அந்த பெண் அணிந்திருந்த செயினை பறித்துக்கொண்டு தப்பியது.
உடனே அந்த பெண் கூச்சலிட அருகே இருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ், இளைஞர் காவல் படை வீரர் ஜோசப் மற்றும் ஒரு ஊர்க்காவல் படை வீரர் ஆகியோர் சேர்ந்து அந்த ஆட்டோவை வழிமறித்து கொள்ளையர்களை பிடித்தனர். அப்போது கொள்ளையர்கள் தப்பிக்க முயற்சி செய்து கத்தியால் தாக்க, போலீஸ்காரர் உட்பட 3 பேரும் காயம் அடைந்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் 4 பேரையும் மடக்கிப் பிடித்தனர்.
அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், கண்ணகி நகரை சேர்ந்த அமீர்(27), நாகராஜ்(29), விஷ்ணு(30), ஜோசப்(31) என்பது தெரிந்தது. “4 பேரும் ஆட்டோவில் திரைப்படம் பார்க்க சென்றுள்ளனர். டிக்கெட் கிடைக்காமல் திரும்பி வந்தபோது பெண்ணின் செயினை பறித்துள்ளனர்” என போலீஸார் தெரிவித்தனர்.
2 பெண்களிடம் செயின் பறிப்பு
சென்னை தண்டையார்பேட்டை கருணாநிதி நகரை சேர்ந்தவர் ஈஸ்வரி (32). தண்டையார்பேட்டை - எண்ணூர் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு ஈஸ்வரி நடந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் ஈஸ்வரி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தாலி செயினை பறித்தனர். உடனே செயினின் ஒரு பகுதியை ஈஸ்வரி கெட்டியாகப் பிடித்துக்கொண்டதால் பாதி செயின் மட்டும் அறுந்து கொள்ளையர்கள் கைகளில் சிக்கிக்கொண்டது. அத்துடன் கொள்ளையர்கள் தப்பிச்சென்று விட்டனர்.
திருவாரூரை சேர்ந்த அருள்பிரகாசம் (35), அவரது மனைவி ஸ்டெல்லா மேரி (30) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு தண்டையார்பேட்டையில் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரதராஜ பெருமாள் கோயில் தெருவில் நடந்து சென்றனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர், ஸ்டெல்லா மேரி கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இந்த இரு செயின் பறிப்பு சம்பவங்கள் குறித்தும் தண்டையார்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.