எம்ஜிஆர் புகழ் என்றும் மறையாது என கிருஷ்ணகிரியில் திரைப்பட இயக்குநர் சுந்தர்ராஜன் பேசினார்.
கிருஷ்ணகிரியில், எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி, கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராஜ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தங்கமுத்து, மாவட்ட மகளிர் அணி செயலாளர் கல்பனா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளரான திரைப்பட இயக்குநர் சுந்தர்ராஜன் பேசியதாவது; பெண்களை தரக்குறைவாக பேசுவது போல் நான் இதுவரை படம் எடுக்கவில்லை. அதற்கு காரணம் எம்ஜிஆர் தான். அவர் ஒரு சகாப்தம். எம்ஜிஆர் மக்களை நேசித்தவர். எம்ஜிஆர் சினிமாவில் எந்த வில்லன்களையும் கொல்ல மாட்டார். மாறாக மன்னிப்பது போல்தான் படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இதே போல் நிஜத்திலும் நடந்துள்ளார். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் எம்ஜிஆரின் புகழ் மறையாது. முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இரட்டை மாட்டு வண்டியைப் போல சென்று கொண்டிருக்கின்றனர். அதனால் தமிழகம் சிறப்பாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.