திமுக ஆட்சியில் ஆளும்கட்சிப் பணிகளை ஆய்வு செய்ய முடியுமா? என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பினார்.
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கினார்.
அதன்பின்பு செய்தியாளர்களிடம் கூறுகையில், "2 கோடியே 8 லட்சம் கார்டுகளுக்கு கடந்த 13-ம் தேதி 2 கோடியே 4 லட்சம் குடும்பங்கள் பொங்கல் பரிசை வாங்கிவிட்டனர்.
98.50சதவீதம் வரை இன்று வரை பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று ஸ்மார்ட் சிட்டி பணிகளை எம்.பி சு.வெங்கடேசன் திமுக எம்எல்ஏ-க்களுடன் சென்று ஆய்வு செய்துள்ளார்.
திமுக ஆட்சியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இப்படி ஆளுங்கட்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய முடியுமா?
ஆய்வு செய்ய விட்ட அரசு அதிகாரிகள் பணியாற்றினார்களா? என்பதை மதுரை மக்களவை உறுப்பினரும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் வரலாற்றை புரட்டிப் பார்க்க வேண்டும்"என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள், சசிகலா வருகையால் முதல்வர் ஆட்டம் காண்பார் என்ற ஸ்டாலின் பேசியது குறித்த கேள்விக்கு, ஸ்டாலின் எதைத்தான் சொல்லவில்லை, அவர் சொல்வதே அவச்சொல்தான் என்றார்.
சசிகலாவை சேர்த்துக்கொள்வது குறித்த கேள்விக்கு, மூத்த அமைச்சராக நல்ல நட்போடு இருந்த நீங்கள் சந்தீப்பீர்களா குறித்த கேள்விக்கு, நேரடியாக பதில் அளிக்காமல் மழுப்பலாகத் தெரிவித்தார்.