தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் 7,24,484 ஆண்கள், 7,57,151 பெண்கள், 164 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 14,81,799 வாக்காளர்கள் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். அதனை தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் பெ.கீதாஜீவன் பெற்றுக் கொண்டார். பின்னர் ஆட்சியர் செந்தில் ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
1.1.2021-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 16.11.2020-ல் வரைவு வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டது. இந்த வரைவு பட்டியலில் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சேர்த்து 7,07,905 ஆண்கள், 7,36,397 பெண்கள், 130 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 14,44,432 வாக்காளர்கள் இருந்தனர். தொடர்ந்து 16.11.2020 முதல் 15.12.2020 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற மனுக்கள் பெறப்பட்டன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மொத்தம் 54,211 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 53,246 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டன. 965 மனுக்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், இறந்தவர்கள், முகவரி மாறிச் சென்றவர்கள் என 6 தொகுதிகளிலும் சேர்த்து பெயர் நீக்கம் செய்ய மொத்தம் 16,634 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 15,879 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டன. 755 தள்ளுபடி செய்யப்பட்டன.
இதன் அடிப்படையில் தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் சேர்த்து 7,24,484 ஆண்கள், 7,57,151 பெண்கள், 164 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 14,81,799 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 1,603 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு வரும் 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினத்தன்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்படும் என்றார் ஆட்சியர்.
நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தேர்தல் பிரவு வட்டாட்சியர் ரகு, திமுக சார்பில் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ, அதிமுக சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் சந்தானம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன், பாஜக சார்பில் எம்.ஆர்.கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொகுதி வாரியாக வாக்காளர் விபரம்:
விளாத்திகுளம்: 1,05,548 ஆண்கள், 1,09,991 பெண்கள், 4 மூன்றாம் பாலினத்தவர், மொத்தம் 2,15,543. வாக்குச்சாவடிகள்: 259
தூத்துக்குடி: 1,38,879 ஆண்கள், 1,45,232 பெண்கள், 53 மூன்றாம் பாலினத்தவர், மொத்தம் 2,84,164. வாக்குச்சாவடிகள்: 282
திருச்செந்தூர்: 1,18,069 ஆண்கள், 1,25,268 பெண்கள், 38 மூன்றாம் பாலினத்தவர், மொத்தம் 2,43,375. வாக்குச்சாவடிகள்: 262
ஸ்ரீவைகுண்டம்: 1,10,132 ஆண்கள், 1,13,622 பெண்கள், 10 மூன்றாம் பாலினத்தவர், மொத்தம் 2,23,764. வாக்குச்சாவடிகள்: 261
ஓட்டப்பிடாரம்: 1,22,372 ஆண்கள், 1,27,653 பெண்கள், 28 மூன்றாம் பாலினத்தவர், மொத்தம் 2,50,053. வாக்குச்சாவடிகள்: 257
கோவில்பட்டி: 1,29,484 ஆண்கள், 1,35,385 பெண்கள், 31 மூன்றாம் பாலினத்தவர், மொத்தம் 2,64,900. வாக்குச்சாவடிகள்: 282
மொத்தம்: 7,24,484 ஆண்கள், 7,57,151 பெண்கள், 164 மூன்றாம் பாலினத்தவர், மொத்தம் 14,81,799, வாக்குச்சாவடிகள் 1,603