அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் புதுச்சேரி மாவட்டத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் இன்று வெளியிட்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1.1.2021ஐ தகுதி நாளாக கொண்டு, புதுச்சேரி (மாகே, ஏனாம் உட்பட) மாவட்டத்தில் உள்ள 25 தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்யும் பணி கடந்த நவ.16ம் தேதி முதல் டிச.15ம் தேதி வரை நடைபெற்றது.
மேற்கூறிய மாற்றங்களை உள்ளடக்கி புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடும் நிகழ்ச்சி இன்று(ஜன 20) நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதனை அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் என்.ஆர். காங்கிரஸ் வேல்முருகன், திமுக லோகையன், நடராஜன், அதிமுக மோகன்தாஸ், மார்க்சிஸ்ட் கோவிந்தராஜூ, பாமக சத்யநாராயணன், தேசியவாத காங்கிரஸ் ராஜாராம், பகுஜன் சமாஜ் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் கூறுகையில், ‘‘புதுச்சேரி மாவட்டத்தில் 3,97,997 ஆண் வாக்காளர்களும், 4,44,123 பெண் வாக்காளர்களும், 97 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 8,42,217 பேர் உள்ளனர். மேலும், இந்த இறுதி வாக்காளர் பட்டியல் இன்று(நேற்று) முதல் அந்தந்த தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது. இச்சமயத்தில் பொதுமக்கள் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம்’’ என்றார்.
படவிளக்கம்: புதுச்சேரி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் வெளியிட்டார். அதனை அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர்.