தமிழகம்

போலீஸார் பாவம்; ஆளுநருக்கு பயப்படுகிறார்கள்: முதல்வர் நாராயணசாமி பேட்டி

செ. ஞானபிரகாஷ்

போலீஸார் பாவம்- ஆளுநரின் மிரட்டலுக்கு பயப்படுகிறார்கள் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்திக்க அனுமதிக்க மறுத்ததால் அவர் மாளிகையான ராஜ்நிவாஸ் அருகே அமைச்சர் கந்தசாமி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதையடுத்து அவரை அழைத்து வர சென்ற புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை நேற்று போலீஸார் தடுத்ததால் டிஜிபி அலுவலகம் அருகேயே சாலையில் தர்ணாவில் ஈடுபட்டார். ஐந்து மணி நேரத்துக்கு அவரை மட்டும் போலீஸார் அனுமதித்தனர். இன்று தொடர்ந்து காலை முதல் பல கூட்டங்களை முதல்வர் நடத்தினார். அதைத்தொடர்ந்து முதல்வரிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் தந்தார்.

காவல்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வரான உங்களையே போலீஸார் காக்க வைத்துள்ளார்களே- போலீஸ் துறை உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதா என்று கேட்டதற்கு, "போலீஸார் பாவம். ஆளுநரின் மிரட்டலுக்கு அவர்கள் பயப்படுகிறார்கள்" என்று குறிப்பிட்டார்.

நகரெங்கும் தடுப்புகள் உள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதை நானே அகற்றுவேன் என்று இரண்டு நாட்களுக்கு முன்பே கூறினீர்களே என்று கேட்டதற்கு, "ஆளுநர் மாளிகைக்கு எவ்வளவு பாதுகாப்பு வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளட்டும். 144 தடை உத்தரவு என்ற பெயரில் பொதுமக்கள் நடமாட முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளனர். இன்று நடந்த பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் தடுப்புகளை அகற்ற வேண்டும். மக்கள் சகஜமாக நடமாட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். 24 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும் என கெடு விதித்துள்ளேன். அதன்பிறகும் அகற்றாவிட்டால் உரிய நடவடிக்கை எடுப்பேன்" என்றார்.

ஆட்சியராக தமிழ் தெரிந்த அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற உங்கள் பரிந்துரை நிராகரிக்கப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு,

"தமிழ்தெரிந்த அதிகாரிதான் ஆட்சியராக இருக்க கோப்பினை அனுப்பினேன். அதை மீறி தமிழ் தெரியாத அதிகாரியை நியமித்துள்ளார். அரசின் அனுமதியின்றி 144 தடை உத்தரவிட்ட ஆட்சியர் பூர்வா கார்க்கிடம் விளக்கம் கேட்டும் இதுவரை பதிலில்லை" என்றார்.

அமைச்சர் கந்தசாமி பத்து நாட்களாக போராடினார் அதற்கு பலன் இருந்ததா என்று கேட்டதற்கு, "அமைச்சர் கந்தசாமி போராட்டத்துக்கு பிறகு 36 கோப்பில் 17 கோப்புக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு கட்ட ரூ.5 லட்சம், துறைமுக அபிவிருத்தி திட்டத்துக்கு ரூ.44 கோடிக்கு ஒப்புதல், பாட்கோவுக்கு ரூ.5 கோடி, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் கழகத்துக்கு ரூ.5 கோடி என 17 கோப்புக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. போராட்டம் இல்லாமல் ஆளுநர், அதிகாரிகள் ஒப்புதல் வழங்கியிருக்கலாம்" என்று குறிப்பிட்டார்.

அடுத்தக்கட்டமாக என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்டதற்கு, "ஜனநாயகத்தை மீறி ஆளுநர் கிரண்பேடி செயல்படுவது தொடர்பாக பலமுறை பிரதமர், உள்துறை அமைச்சரிடம் புகார் செய்தும் பயனில்லை. மக்கள் பிரதிநிதிகளை அவமதிப்பது மக்களை அவமதிப்பாக அர்த்தம். இதனை பிரதமர் புரிந்துகொள்ள வேண்டும். இது எங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. ஜனாதிபதியை நேரில் சந்தித்து அவரிடம் ஆளுநர் கிரண்பேடியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்த உள்ளோம்.இதற்காக வரும் 21,22ம் தேதிகளில் நேரம் ஒதுக்கி தர கேட்டுள்ளோம்." என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT