திருநெல்வேலி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 13,53,159 வாக்காளர்கள் உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்டார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வாக்காளர் பட்டியலின்படி 6,62,326 ஆண்களும், 6,90,732 பெண்களும், 101 இதர வாக்காளர்கள் என்று மொத்தம் 13,53,159 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இறுதி வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் 18-19 வயது நிரம்பியவர்கள் 27,205 பேரும், 20 வயது மற்றும் அதற்குமேலுள்ளவர்கள் 13,25,954 பேரும் உள்ளனர். கடந்த 16.11.2020-ல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 13,16,762 பேர் இருந்தனர்.
1.1.2021-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு கடந்த 16.11.2020 முதல் 15.12.2020 வரை சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்றது. தொடர்ந்து 21.11.2020, 22.11.2020, 12.12.2020 மற்றும் 13.12.2020 ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது. வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பாக நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் படிவங்கள் பெறப்பட்டன.
அதன்படி புதிதாக ஆண் வாக்காளர்கள் 20,124 பேரும், பெண் வாக்காளர்கள் 22,626 பேரும், இதர வாக்காளர்கள் 12 பேருமாக மொத்தம் 42,762 பேரும் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் 5254 பேரும், இரட்டை பதிவுகளுக்காக 213 பேரும், இடமாறி சென்றவர்கள் 898 பேருமாக மொத்தம் 6365 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 7498 வாக்காளர்களின் பெயர் மற்றும் இதர திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. 3665 வாக்காளர்களின் முகவரி மாற்றம் செய்யப்பட்டது.
இறுதி வாக்காளர் பட்டியலை சார் ஆட்சியர், உதவி ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்குச்சாவடி அமைவிடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், மாநகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்போர் நலச்சங்கங்கள் ஆகியவற்றில் பார்வையிட்டு தங்கள் பெயர்களை சரிபார்த்து கொள்ளலாம். மேலும் வாக்காளர் சேவைமைய தொலைபேசி எண் 0462-1950, Voters Helpline APP மற்றும் www.nvsp.inஎன்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 5 சட்டப் பேரவை தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் விவரம்:
திருநெல்வேலி: ஆண்கள்- 142272, பெண்கள்- 148829, இதர வாக்காளர்கள்- 55, மொத்த வாக்காளர்கள்- 291156.
அம்பாசமுத்திரம்: ஆண்கள்- 118443, பெண்கள்- 125601, இதரர்- 4, மொத்தம்- 244048.
பாளையங்கோட்டை: ஆண்கள்- 133193, பெண்கள்- 138511, இதரர்- 21, மொத்தம்- 271725.
நாங்குநேரி: ஆண்கள்- 135803, பெண்கள்- 140544, இதரர்- 9, மொத்தம்- 276356
ராதாபுரம்: ஆண்கள்- 132615, பெண்கள்- 137247, இதரர்- 12, மொத்தம்- 269874.
மொத்தம் 5 தொகுதிகளிலும் ஆண்கள்- 662326, பெண்கள்- 690732, இதர வாக்காளர்கள்- 101, மொத்த வாக்காளர்கள்- 1353159.