ஓசூர் தேசிய நெடுஞ்சாலையை யானை உள்ளிட்ட வன விலங்குகள் ஆபத்தின்றிக் கடந்து செல்லும் வகையில் பசுமை மேம்பாலம் அமைக்க மாவட்ட வனத்துறை சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஓசூர் வனக்கோட்டம், ஓசூர் வனச்சரகத்தில் உள்ள சானமாவு காப்புக்காட்டை ஒட்டியவாறு பெங்களூரு மற்றும் சென்னை வழித்தடத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. வடமாநிலங்களை பெங்களூரு வழியாகத் தமிழகத்துடன் இணைக்கும் முக்கிய சாலையாக இந்த தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
இதனால் இச்சாலையில் பகல், இரவு என 24 மணிநேரமும் இடைவிடாமல் வாகனப் போக்குவரத்து காணப்படுகிறது. இருபுறமும் சானமாவு காப்புக்காட்டினால் சூழப்பட்டு, வனத்தின் இடையே அமைந்துள்ள இந்த பரபரப்பான தேசிய நெடுஞ்சாலையை யானை உள்ளிட்ட வனவிலங்குகள் கடந்து செல்ல முயற்சிக்கும்போது வாகனங்களில் சிக்கி உயிரிழப்பது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
இந்த சாலை விபத்துகளில் இருந்து வனவிலங்குகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவின் பேரில் முதற்கட்டக் களத்தணிக்கை மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓசூர் வனச்சரகர் ஆர்.ரவி, ஓசூர் வட்டார போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் (முதல்நிலை) ஏ.விஜயகுமார் மற்றும் வனவர் காளியப்பன் ஆகியோர் பங்கேற்று விபத்து நடைபெற்ற இடத்தில் களத்தணிக்கை மேற்கொண்டனர்.
இந்த முதல் கட்ட களத்தணிக்கையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வனச்சரகர் ரவி கூறும்போது, ''தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி யானை உயிரிழப்பு, விபத்துகள் ஏற்பட்ட பகுதியில் வாகனங்கள் 40 கி.மீ. வேகத்தில் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் வாகனங்களின் வேகத்தை மேலும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் தானியங்கி ஒலிபெருக்கி பொருத்தப்பட்டு அதன் மூலமாக வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கையும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்.
மேலும் தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலமாக சாலையின் இருபுறமும் சோலார் மின்வேலி அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையை யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பாதுகாப்புடன் கடந்து செல்லும் வகையில் பசுமை மேம்பாலம் அமைக்கவும் இந்த முதல் கட்டக் களத்தணிக்கைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.