தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டி யலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும்.
தமிழகத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் 5 கோடியே 68 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் செய்ய அக்டோபர் 24-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த அவகாசம் இன்றுடன் முடிகிறது.
2016 ஜனவரி 1-ம் தேதி 18 வயது பூர்த்தி அடைபவர்கள் (1998 ஜனவரி 1-ம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள்) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்க படிவம் 7, திருத்தங்கள் செய்ய படிவம் 8, ஒரே சட்டப்பேரவை தொகுதிக்குள் முகவரி மாற்ற படிவம் 8 ஏ ஆகியவற்றை பூர்த்தி செய்து மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் அளிக்கலாம். திருத்தங்கள் செய்து புதிய வாக்காளர் அட்டை பெற படிவம் 001-ஐ பூர்த்தி செய்து ரூ.25 கட்டணம் செலுத்த வேண்டும்.
இணையதளம் (www.elections.tn.gov.in) அல்லது EASY என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி முடிந்ததும், புதிய வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்படும். தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ம் தேதி புதிய வாக்காளர் அட்டைகள் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.