அதிமுக ஆட்சிக்கு எதிரான ‘எதிர்ப்பு அலை' வெளிப்படையாகத் தெரிவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறியிருந்தேன். இப்போது மக்கள் கிராம, வார்டு சபை கூட்டங்களுக்கு மக்கள் அளித்த ஆதரவின் மூலம், 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் சூழல் உருவாகியுள்ளது.
10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் அனைத்து முனைகளிலும் பின்தங்கிவிட்டது. முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றதில்இருந்து புதிய முதலீடுகள் வரவில்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் கடனில் தமிழகம் தத்தளித்து நிற்கிறது.
விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், வணிகர்கள், மாணவர்கள், ஏழை, எளிய நடுத்தரமக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டதை கிராம சபைக் கூட்டங்களில் என்னால் காண முடிகிறது.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழகத்தின் உரிமைகளுக்கு ஓங்கி குரல் கொடுப்பதால் மக்கள் மனதில் திமுக நீங்கா இடம் பெற்றிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான்சட்டப்பேரவையிலும், பொது வெளியிலும் மக்கள் பிரச்சினைகளுக்காக போராடி இருக்கிறேன். திமுகவால்தான் தமிழகத்தின் உரிமைகள் ஓரளவுக்காவது இப்போது காப்பாற்றப்பட்டுள்ளன என்று மக்கள் எண்ணுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, திமுகவின் வியூகத்தை செயல் வடிவில் காண்பீர்கள். கடந்த பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு கைகொடுத்த மேற்கு மாவட்டங்கள்தான் அதிமுகஆட்சியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேற்கு மண்டலம் அதிமுகவுக்கு செல்வாக்கான பகுதி என்பது 2019 தேர்தலிலேயே உடைக்கப்பட்டுவிட்டது. கடந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி இத்தேர்தலிலும் தொடரும்.
திமுகவுக்கான ஆதரவு பெருகி வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத அரசியல் எதிரிகளால், ‘அதிமுக அரசுக்கு மக்களிடம் எதிர்ப்பு எதுவும் இல்லை’ என்ற மாயபிம்பம் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் அதிமுக அரசுக்கு ‘எதிர்ப்பு அலை’என்பது சுனாமி போல வீசுகிறது. 1991-96 காலகட்டத்தில் அதிமுகஅரசுக்கு இருந்ததைவிட பன்மடங்கு எதிர்ப்பு இப்போது உள்ளது. அதனால்தான் அதிமுகவால் எதிர்க்கட்சியாகக்கூட வர முடியாது என்கிறேன்.
புதுச்சேரி அரசியல் மாறுபட்டது. அங்கு திமுகவை வலுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதுகட்சிப் பணியே தவிர, தேர்தல் பணிகள் அல்ல. இதை கூட்டணியுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.