ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா, சசிகலா விடுதலை குறித்து ஆலோசிக்கும் வகையில் வரும் 22-ம் தேதி காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை மெரினாவில் ரூ.79.75 கோடியில் ஜெயலலிதா நினைவிடம் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் பழனிசாமி வரும் 27-ம் தேதி திறந்துவைக்க உள்ளார். அதே நாளில் ஜெயலலிதா தோழி சசிகலா, பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகிறார். சிறை செல்லும் முன்பு வந்து சபதம் செய்ததுபோல, விடுதலையாகும் நாளிலும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா வரக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், டெல்லியில் நேற்று முதல்வர்பழனிசாமியிடம், ‘‘சசிகலா அதிமுகவில் இணைவாரா?’’ என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘100 சதவீதம் இணைக்கப்பட மாட்டார்’’ என்று முதல்வர் உறுதிபட தெரிவித்தார்.
இதற்கிடையில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா ஆகியோர் சமீபத்தில் சசிகலாவைஉயர்த்திப் பேசியது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சசிகலா விடுதலையான பிறகு அதிமுகவில் எந்த குழப்பமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் ஒருங்கிணைப்பாளர்கள் மிக எச்சரிக்கையாக உள்ளனர்.
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 22-ம் தேதி காலை9.45 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் உட்பட முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் பங்கேற்க வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மற்றும் விழாவுக்கு யார் யாரை அழைப்பது என்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது. மாவட்ட வாரியாக நிர்வாகிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட உள்ளன. முக்கியமாக, சசிகலா குறித்து யாரும் எந்த கருத்தையும் வெளியிடக் கூடாது என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை ஒருங்கிணைப்பாளர்கள் வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
இக்கூட்டத்தை தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டம், இடைக்கால நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.