தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜனவரி மாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த தொடர் மழையின் காரணமாக 2 லட்சம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
அம்மாபேட்டை பகுதிகளில் வயல்களில் மழைநீர் தேங்கியதால் வயலில் நெற்பயிர்கள் சாயந்தன. தற்போது வெயில் அடிக்கத் தொடங்கியதும் சாய்ந்த நெற்பயிரில் உள்ள நெல்மணிகள் முளைக்க தொடங்கியுள்ளன. மேலும், வைக்கோல்கள் அனைத் தும் அழுகிவிட்டன. இதை அறு வடை செய்தாலும் பெரிய அளவில் மகசூல் கிடைக்காது. அறுவடைக் காக செய்யும் செலவுக்கு கூட போதாது என்பதால், இவற்றை அறுவடை செய்யாமல் அப்படியே விட்டுவிட முடிவு செய்துள்ளதாக மிகுந்த மன வேதனையோடு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அம்மாபேட்டை விவசாயிகள் சூரியமூர்த்தி, முருகேசன், சந்திரா ஆகியோர் கூறும்போது, “நாங்கள் ஒருபோகம் சம்பா சாகுபடி செய்தோம். ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்திருந்தோம். நல்ல விளைச்சல் கண்டிருந்தது. பொங்கல் முடிந்ததும் அறுவடை செய்யலாம் என இருந்தோம், ஆனால், அதற்குள் எதிர்பாராதவிதமாக பெய்த தொடர் மழையால் விளைந்த நெற் கதிர்கள் அனைத்தும் வயலில் சாய்ந்தன. வயலில் தண்ணீர் தேங்கியே இருந்ததால் சாய்ந்த பயிர்களில் நெல்மணிகள் முளைத்துவிட்டன. இதை அறுவடை செய்தால் கிடைக்கும் மகசூலை விட கூலிக்கு அதிகம் செலவாகும் என்பதால், இவற்றை வயலில் அப்படியே விட்டுவிடலாம் என உள்ளோம்.
நெல் சாகுபடிக்காக வாங்கிய கடனை எப்படி செலுத்துவது எனத் தெரியவில்லை. தமிழக அரசு எங்களின் வயல்களை கள ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கினால் மட்டுமே நாங்கள் அடுத்த சாகுபடியை மேற்கொள்ள முடியும்” என்றனர்.