தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்த புற்றுநோயாளியை தீயணைப்பு படையினர் ரப்பர் படகு மூலம் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
தமிழகம்

தூத்துக்குடியில் வடியாத மழை வெள்ளம்; வீட்டுக்குள் தவித்த புற்று நோயாளி படகு மூலம் மீட்பு: தீயணைப்பு படையினர் நடவடிக்கை

செய்திப்பிரிவு

மழை வெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்த புற்றுநோயாளியை, தீயணைப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தூத்துக்குடியில் மழை ஓய்ந்து நான்கு நாட்களாகியும் பல இடங்களில் இன்னும் தண்ணீர் வடியவில்லை. குறிப்பாக குறிஞ்சிநகர், முத்தம்மாள் காலனி, ராம் நகர், ரஹமத் நகர், லெவிஞ்சிபுரம், பிரையன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை சுற்றி இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். மாநகராட்சி சார்பில் 150-க்கும் மேற்பட்ட ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்ற போதிலும், பல இடங்களில் மழைநீர் வடியவில்லை.

குறிஞ்சிநகர் பகுதியில் வீட்டை சுற்றி மழைவெள்ளம் தேங்கி நிற்பதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தார். இதுகுறித்து தூத்துக்குடி வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது.

அவர், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மாவட்ட தீயணைப்பு அலுவலர் எஸ்.குமார் உத்தரவின்பேரில் தீயணைப்பு படையினர் ரப்பர் படகு மூலம் நேற்று அந்த பெண்ணை வீட்டில் இருந்து மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT