மதுரையில், எம்.பி.சு.வெங்கடேசனின் நெருக்கடியால் மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக்குழு கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியரும், மாநகராட்சி ஆணையாளரும் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பங்கேற்க இருந்த ஆய்வுக்கூட்டத்திற்கு செல்ல முடியாததால் அமைச்சர் அந்தக் கூட்டத்தை ரத்து செய்தார்.
பதற்றமடைந்த மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி அதிகாரிகள், உடனடியாக வர முடியாததற்கான விளக்கத்தைக் கூறி அமைச்சரை சமாதானம் செய்தனர்.
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக்குழு கூட்டம் இதுவரை ஒரு முறை கூட கூட்டப்படாத நிலையில் எம்.பி., சு.வெங்கடேசன் கொடுத்த நெருக்கடியால் இன்று முதல் முறையாக நடந்தது.
இதில், மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், அதிமுக எம்எல்ஏ விவி.ராஜன் செல்லப்பா, எம்.பி. சு.வெங்கடேசன், திமுக எம்எல்ஏ-க்கள் மூர்த்தி, பிடிஆர். பழனிவேல் தியாராஜன் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டம் 10 மணிக்கு தொடங்கிய நிலையில் 11 மணிக்கு மாநகராட்சி மைய அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் ஆய்வுக்கூட்டம் நடப்பதாக இருந்தது.
அதற்காக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, அழகர்கோயில் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு வந்து ஆட்சியரும், மாநகராட்சி ஆணையாளரும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தப்பிறகு ஆய்வுக் கூட்டத்திற்கு செல்வதற்காகக் காத்திருந்தார்.
ஆட்சியரும், மாநகராட்சி ஆணையாளரும் இந்தக் கூட்டத்தை விரைவாக முடித்துவிட்டு அமைச்சர் ஆய்வுக் கூட்டடத்திற்கு செல்வதற்கு தயாராக இருந்ததை அறிந்து அதிருப்தியடைந்த எம்பி.சு.வெங்கடேசன், ‘‘முதல் முறையாக ஸ்மார்ட் சிட்டி ஆலோனைக்குழு கூட்டம் நடக்கிறது. அதற்கான முடியும் நேரத்தை நிர்ணயிக்கக்கூடாது, கூட்டம் முடிந்தபிறகே அதிகாரிகள் செல்ல வேண்டும்’’ என ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளருக்கு நெருக்கடி கொடுத்தார்.
மேலும், 11 மணிக்கு அமைச்சர் ஆய்வுக்கூட்டம் நடக்கும் என்று செய்தியாளர்களுக்கு தகவல் அனுப்பிய மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியையும் எம்பி.சு.வெங்கடேசன் கடிந்து கொண்டார்.
எம்பி., யின் நெருக்கடியால் ஆட்சியர், மாநராட்சி ஆணையாளரால் இக்கூட்டம் முடியும் வரை அங்கிருந்து வெளியே வரமுடியவில்லை. இதற்கிடையில் மற்றொரு புறம் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, சுற்றுலா மாளிகையில் காத்துகொண்டே இருந்தார்.
ஒரு கட்டத்தில் அதிகாரிகள் வர தாமதமானதால் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வுக்கூட்டத்தை ரத்து செய்து புறப்பட்டுவிட்டார். தகவல் அறிந்த ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் பதறிப்போகினர்.
அதன்பிறகு கூட்டம் தாமதம் ஆனதற்கான காரணத்தையும், எம்.பி.,யின் நெருக்கடியையும் அவர்கள் எடுத்துக்கூறியதால் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சமாதானம் ஆனதாகக் கூறப்படுகிறது.
எதிர்க்கட்சி எம்பி பங்கேற்ற கூட்டத்தால் அமைச்சர் ஆய்வுக்கூட்டம் மதுரையில் ரத்தான இச்சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.