தமிழகம்

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் வாக்குக்குப் பதிலாக மின்னணு இயந்திரம் வழியாக வாக்களிக்க வசதி கோரி வழக்கு: இந்தியத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

கி.மகாராஜன்

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் வாக்குக்குப் பதிலாக மின்னணு இயந்திரம் வழியாக வாக்களிக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கச் செயலர் பாண்டித்துரை, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தேர்தலில் எந்த ஒரு வாக்காளரும் வாக்களிக்காமல் இருக்கக்கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் தாரக மந்திரமாக உள்ளது. அதன்படி நூறு சதவீத வாக்குப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் மூலம் வாக்குகளை பதிவு செய்கின்றனர். தபால் வாக்குக்கு விண்ணப்பம் 12-யை பூர்த்தி செய்ய வேண்டும்.

பின்னர் அதை அதற்கான விண்ணப்பத்துடன் இணைத்து உரிய அலுவலரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். இந்த நடைமுறையை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க முடியாது.

2011 தேர்தலில் தபால் வாக்குக்காக 2,69,473 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அதில் 1,72,628 விண்ணப்பங்கள் மட்டுமே மீண்டும் பெறப்பட்டன. இதில் 1,06,094 வாக்குகள் மட்டுமே செல்லத்தக்கவை. எஞ்சிய தபால் ஓட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

இதனால் தபால் வாக்கு நடைமுறைகளால் நூறு சதவீத வாக்குப்பதிவு நிறைவேறாமல் போய்விடுகிறது. தேர்தலில் தபால் வாக்குகள் முக்கிய பங்காற்றுகிறது. சில நேரங்களில் தபால் வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கிறது.

எனவே, நூறு சதவீத வாக்குப்பதிவு நடைபெற தேர்தல் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அவர்களின் வாக்கை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமாகவே பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்ஜிவ்பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை செயலர், தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

SCROLL FOR NEXT