தமிழகம்

அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் தேர்தல் வெற்றி இலக்கை நோக்கி உழைப்போம்: ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் ஓபிஎஸ் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

அதிமுகவில் அண்ணன், தம்பி பிரச்சினைகள் இருந்தால் பேசித் தீர்த்து, சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற ஒற்றுமையுடன் உழைப்போம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் வரும் பிப்ரவரி 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை கொண்டாடுவது தொடர்பாக ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தை, 30 ஆண்டுகளாக பல்வேறு சோதனைகளை தாண்டி ஜெயலலிதா வழிநடத்தினார். அதிமுகவை அழிக்க திமுக நினைத்தது. ஆனால், இன்றைக்கு யாராலும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுக திகழ்கிறது. சாதாரண தொண்டராக இருப்பதையே பெருமையாக நினைக்கும் இயக்கம் அதிமுகவாகும்.

அதிமுக இன்னும் பல ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் செயல்பட்டால் யாராலும் அதிமுகவை வெல்ல முடியாது. இரண்டு, மூன்று அண்ணன் தம்பிகள் உள்ள குடும்பத்திலேயே சண்டை உள்ளது. ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட நம் இயக்கத்தில் உள்ள அண்ணன், தம்பி பிரச்சினைகளை பேசித் தீர்க்கலாம். பிரச்சினைகளை புறந்தள்ளிவிட்டு, சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்பதை இலக்காக கொண்டு செயல்படுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை, ஏழை தாய்மார்கள், மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவோம். அவரது புகழை உலகெங்கும் எடுத்து சென்றிடுவோம். திருமங்கலம் பேரவை தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் கோயிலை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்துவைத்து, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் விழாவை சிறப்பாக நடத்துவோம். ஜெயலலிதா பிறந்தநாளில் விளையாட்டுப் போட்டிகள், மரம் நடும் விழா, மருத்துவ முகாம் நடத்துவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவோம்’ என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SCROLL FOR NEXT