மருத்துவக் கலந்தாய்வில் போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பித்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மாணவி, பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
கடந்த டிசம்பர் 7-ம் தேதி நடந்த மருத்துவக் கலந்தாய்வில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைசேர்ந்த மாணவி பங்கேற்றார். அவரதுஅழைப்புக் கடிதம், ரேங்க் பட்டியலை சரிபார்த்தபோது, அவர் போலிசான்றிதழ் சமர்ப்பித்தது கண்டுபிடிக்கப்பட்டது. நீட் தேர்வில் 27 மதிப்பெண் பெற்ற அவர் 610 பெற்றதாக போலி சான்றிதழ் கொடுத்திருந்தார்.
இதையடுத்து, சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலாளர் செல்வராஜன் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், மாணவி மற்றும் அவரது தந்தையான பல் மருத்துவர் பாலச்சந்திரன் (48) ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, 4 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், வழக்கில் தேடப்பட்டு வந்த பாலச்சந்திரன், கடந்த ஜனவரி 1-ம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டார். அவர் சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். வேறொரு மாணவியின் நீட் மதிப்பெண் சான்றிதழில் புகைப்படத்தை மாற்றி போலி சான்றிதழ் தயாரிக்கப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அவரை போலீஸார் கடந்த 8-ம் தேதி முதல் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். 4 நாள் விசாரணைக்குப் பிறகு, அவர் மீண்டும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில், தலைமறைவாக இருந்த மாணவியை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்நிலையில், பெங்களூருவில் பதுங்கி இருந்த மாணவியை போலீஸார் நேற்று கைது செய்தனர். மோசடியின் முழு பின்னணி குறித்து அறியவும், அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யவும், மாணவியை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள தரகரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.