மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட டி.கல்லுப்பட்டியில் அருகே உள்ள டி.குன்னத்தூரில் ஜனவரி 30-ம் தேதி ஜெயலலிதா கோயிலை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திறந்து வைக்கின்றனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அம்மா பேரவை மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அம்மா பேரவை மாநிலச் செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வருகிற ஜனவரி 30-ம் தேதி திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட டி.கல்லுப்பட்டியில் உள்ள டி.குன்னத்தூரில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரால் அமைக்கப்பட்டுஉள்ள ஜெயலலிதா கோயில் திறப்பு விழா நடைபெறுகிறது.
முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த ஆலயத்தைத் திறந்து வைத்து எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து வழிபடுகின்றனர்.
பின்னர், மூத்த தொண்டர்களுக்கு குடும்ப நல நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்குகின்றனர். ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டிகள், மரம் நடுவிழா, மருத்துவமுகாம், ரத்த தானம், பசு தானம் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. வாரிசு அரசியலை ஒழித்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒன்றரை கோடி தொண்டர்கள் ஒருங்கிணைந்து உழைத்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஜெயலலிதா அரசு அமைய பாடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.