சட்டப்பேரவை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக மதிமுக மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக் குழு கூட்டம் பிப்.3-ம்தேதி நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் பிப்.3-ம் தேதி காலை9 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெறும்.
அதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக் குழு, ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய்ய உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதே கூட்டணியில் தொடர்கிறது. திமுகவிடம் எத்தனை தொகுதிகள், எந்தெந்தத் தொகுதிகளைக் கேட்பது, வேட்பாளர்கள் யார், வாக்குச்சாவடி குழுஅமைப்பு, வைகோவின் பிரச்சாரத் திட்டம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக மதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது ஈரோடு தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட்டது. வரும்சட்டப்பேரவைத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடப் போவதாக வைகோ ஏற்கெனவே அறிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்திடம் எந்த சின்னத்தைக் கோருவது என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.