இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவில் இருந்து பலர் பாகிஸ்தான் சென்றனர். ஆனால், அவர்களின் சொத்துகள் இங்கு இருந்தன. அந்த நிலத்தை நிர்வகிக்க எதிரி சொத்துகளை நிர்வகிக்கும் துறை உருவாக்கப்பட்டு, மும்பையில் இதன் தலைமை அலுவலகம் உள்ளது. பாகிஸ்தானுக்கு சென்றோரின் சொத்துகள், எதிரி சொத்துகளாக அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் 9,406 அசையா சொத்துகள் கண்டறியப்பட்டன.
இதில், சென்னை மண்ணடி மூர் தெருவில் 2 பழமையான கட்டிடங்கள் பாகிஸ்தானுக்குச் சென்ற நபருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இச்சொத்துகளை, எதிரி சொத்துகளை நிர்வகிக்கும் துறை அதிகாரி பேட்ரியா, வருவாய் துறை அதிகாரிகளுடன் கடந்த9-ம் தேதி ஆய்வு செய்து, அக்கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைத்தனர்.
மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அலுவலகம் உள்ள இடமும் பாகிஸ்தானுக்கு சென்ற நபரின் சொத்து என்பது குறிப்பிடத்தக்கது. அங்கேயும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
“எதிரி சொத்தை அனுபவித்து வரும் தற்போதைய நபர்களே அதை அரசிடம் விலைக்கு வாங்கிக் கொள்ள, மத்திய உள்துறை அமைச்சகம் முன்னுரிமை அளிக்கும். இல்லையெனில் ஏலத்தில் விடுவது பற்றி அரசு முடிவெடுக்கும்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்படியான சொத்துகளை நிர்வகிக்க இப்படி ஒரு துறைஇருப்பnதே பலருக்கு இப்போதுதான் தெரியவந்துள்ளது. இங்கிருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர்களின் சொத்துகளின் ஆதாரங்களை அத்துறைக்கு கடிதங்கள் மூலம் பலர் அனுப்பி வருகின்றனர். தமிழகத்தில் இருந்தும் கடிதங்கள் வந்துள்ளன. இதன் அடிப்படையில் ஆய்வு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.