தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. கரோனா காலம் என்பதால், கூடுதலாக 30 ஆயிரம் வாக்குச்சாவடிகள் என 95 ஆயிரம் வாக்குச்சாவடிகளை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், கடந்த நவம்பர் 16 முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றன. இந்த காலகட்டத்தில் 30 லட்சத்து68 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. இதில், பெயர் சேர்ப்பதற்கு மட்டுமே 20 லட்சத்துக்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, கள ஆய்வுக்குப் பின்பு தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது. கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி வெளியிடப்பட்ட தமிழக இறுதி வாக்காளர் பட்டியலில், தமிழகத்தில், 3 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 172 ஆண், 3 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரத்து 969 பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 6 ஆயிரத்து 497 பேர் என 6 கோடியே 13 லட்சத்து 6 ஆயிரத்து 638 வாக்காளர்கள் இருந்தனர்.
இந்நிலையில், பெயர் சேர்க்க மட்டும் 20 லட்சத்துக்கும் அதிகமான மனுக்கள் பெறப்பட்டுள்ளதால், வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதுதவிர, வரும் 25-ம்தேதி நடைபெறும் தேசியவாக்காளர் தினத்தில் புதியவாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய வாக்காளர் தினத்தில் (25-ந் தேதி) புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.