தமிழகம்

ஜெயலலிதாவுடன் அதிமுக புதிய மாவட்ட செயலாளர்கள் சந்திப்பு

செய்திப்பிரிவு

அதிமுகவில் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட புதிய மாவட்ட செயலாளர்கள் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அதிமுகவில் கிளை, நகரம், ஒன்றியம், மாவட்ட அளவிலான நிர்வாகிகள் பதவிக்கான உட்கட்சி தேர்தல் கடந்தாண்டு தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்தது.

இதில், கட்சி ரீதியாக பிரிக்கப் பட்ட 50 மாவட்ட செயலாளர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் அமைச்சர்களாக உள்ள 18 பேரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் நேற்று காலை முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முன்னதாக, சட்டப்பேரவை கூட்டம் கடந்த மாதம் 29-ம் தேதி முடிந்ததும், 30-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா சிறுதாவூர் சென்றார்.

அங்கு 9 நாட்கள் தங்கியிருந்த அவர், 10-ம் தேதி போயஸ்கார்டன் திரும்பினார். நேற்று முன்தினம் மறைந்த நடிகை மனோரமா வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து, நேற்று காலை தன் வீட்டில், புதிய மாவட்டச் செயலாளர்களை சந்தித்தார். அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட முதல்வர், சட்டப்பேரவை தேர்தல் தொடர் பாக அவர்களுக்கு அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பில், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட செயலரும் உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் பங்கேற்கவில்லை.

SCROLL FOR NEXT