தமிழகம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரிக்கை: அதிகாரிகளுக்கு மனு கொடுக்கத் தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

கி.மகாராஜன்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரிய வழக்கில், கோரிக்கை தொடர்பாக அதிகாரிகளுக்கு மனு கொடுக்கத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.

விருதுநகரைச் சேர்ந்த காந்திராஜன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''தமிழகத்தில் மது விற்பனை வருவாய் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. இதேபோல் மதுவால் விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. மதுவால் ஏற்படும் விபத்துகள், தற்கொலைகள், குடும்பப் பிரச்சினையால் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் அரசின் வருவாய் பாதிக்கப்படும் எனத் தமிழக அரசு நினைக்கிறது. ஆனால், பல்வேறு வழிகளில் வருவாய் பெருக்க வாய்ப்புகள் உள்ளன. 5 ஆண்டுக்கு ஒருமுறை நிலத்தின் மதிப்பைக் கணக்கிட வேண்டும். 2012-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது வரை நிலத்தின் மதிப்பு கணக்கிடப்படவில்லை.

இவ்வாறு நிலத்தின் மதிப்பைக் கணக்கிட்டால் கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கும். மணல் விற்பனையால் ரூ.20 ஆயிரம் கோடி, தாது மணல் விற்பனை மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். பிஹாரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தியதால் பால் மற்றும் அதனைச் சார்ந்த பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.

எனவே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் வரை கிடைக்கும். எனவே, தமிழகத்தில் படிப்படியாகப் பூரண மதுவிலக்கை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், ''மதுப் பழக்கத்தால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போதையில் வாகனம் ஓட்டுபவர்களால் விபத்துகள் அதிகரித்து உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் வருகின்றன. இதனால் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது தலைமை நீதிபதி அமர்வு, ''தமிழகத்தில் பூரண மதுவிலக்ககு அமல்படுத்தப்படுவது தமிழக அரசின் கொள்கை முடிவு. அதில் தலையிட முடியாது. மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்கலாம்'' என்று உத்தரவிட்டு விசாரணையை முடித்து உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT