துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி நீதிபதிகள் பற்றி அவதூறாகப் பேசியது குறித்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
துக்ளக் பத்திரிகையை நிறுவி, அதன் ஆசிரியராக இருந்த சோ அனைவரும் மதிக்கப்படும் அரசியல் விமர்சகராக இருந்தார். அனைத்துக் கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் இருந்தனர். ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று துக்ளக் ஆண்டு விழா நடக்கும். அப்போது துக்ளக் வாசகர்களுடன் உரையாடுவதையும், அவர்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பதையும் அவர் வாடிக்கையாக வைத்திருந்தார்.
அப்போது அவர் கூறும் கருத்துகள் நகைச்சுவையுடனும், ஏற்கும்படியாகவும் இருக்கும் என அனைவரும் அவரது பேச்சைக் கூர்ந்து கவனிப்பார்கள். சோவின் மறைவுக்குப் பின் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் ஆடிட்டர் குருமூர்த்தி. அவர் சோ பாணியில் அரசியல் பேசினார். சாக்கடையை எடுத்து அவசரத்திற்குத் தீயை அணைக்கப் பயன்படுத்தலாம் என அதிமுக கூட்டணியையும், சசிகலா அதிமுகவில் இணைந்தாலும் பயன்படுத்தலாம் என்கிற ரீதியில் குருமூர்த்தி பேசியதால் சசிகலா தரப்பிலும் கண்டனம் எழுந்தது.
அதே கூட்டத்தில் நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்தும் குருமூர்த்தி பேசியது சர்ச்சையை எழுப்பியது. நீதிபதிகள் நியமனம் குறித்தும், நேர்மை குறித்தும், தீர்ப்புகள் குறித்தும் விமர்சிப்பதா என அவருக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி, குருமூர்த்தியின் விமர்சனம் குறித்துத் தெரிவித்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், துக்ளக் ஆண்டு விழாவில் அதன் ஆசிரியர் குருமூர்த்தி நீதிபதிகள் நியமனம், அதுகுறித்த விமர்சனம் பற்றிப் பேசியது நீதித்துறையை அவமதிக்கும் செயல். இதுகுறித்து நீதிமன்றம் குருமூர்த்தி மீது தாமாக முன்வந்து 15(1) என்ற பிரிவின் கீழ் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனு ஓரிரு நாளில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு முன் இதே கோரிக்கையுடன் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் முறையீடு செய்தார். முறையீட்டை மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி கிருபாகரன் அமர்வு தெரிவித்துள்ளது.