தமிழகம்

ஜன.21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

திமுக ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்க ஜன-21 அன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் வருவதற்கு 3 மாதங்கள் இடையில் உள்ளது. தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தலைமையில் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன. ரஜினி அரசியலுக்கு வரவில்லை என அறிவித்து விட்டார். கமல், சீமான், டிடிவி தினகரன் தனியாக களம் காண்கின்றனர். திமுக அணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, முஸ்லீம் லீக், மமக உள்ளிட்ட கட்சிகள் அணி திரண்டு நிற்கின்றனர்.

அதிமுக அணியில் பாஜக உள்ளது. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் இணைய வாய்ப்புள்ளது. இந்நிலையில் அரசியல் மாற்றங்கள் காரணமாக கட்சிகள் தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்படும் நிலை ஆங்காங்கே உருவாகியுள்ளது.

பாஜக அதிக தொகுதிகளை கேட்டு அதிமுகவை நெருக்கி வருகிறது. திமுகவில் கூட்டணிக்கட்சிகளுக்கு குறைவான இடங்களை ஒதுக்க வேண்டும், குறிப்பாக காங்கிரஸுக்கு அதிக இடம் ஒதுக்கக்கூடாது என திமுகவில் இரண்டாம் கட்டத்தலைவர்கள் தலைமையை வலியுறுத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் திமுக தலைமையில் ஆட்சி அமையவேண்டும் என்கிற பேச்சு வலுத்து வருகிறது. இதனால் திமுக அணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. கமல் கட்சியுடன் காங்கிரஸ் இணைய வேண்டும் என்கிற பொருள்பட காங்கிரஸிலும் சிலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தனது நிலைப்பாடு, தமிழகத்தில் வலுவாக உள்ள இடங்கள், தேர்தல் செயல்பாடு, தொகுதி நிலைமை கூட்டணிக்கட்சிகளுக்கான இடம் ஒதுக்கீடு உள்ளிட்ட பல விஷயங்களை மாவட்டச் செயலாளர்களுடன் கலந்தாலோசிக்க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டுகிறது.

வரும் ஜன.21 அன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்தக்கூட்டம் நடக்க உள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

“தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற ஜன.21 வியாழக்கிழமை மாலை 5.00 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கத்தில்" நடைபெறும்.

அதுபோது மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பொருள் : கழக ஆக்கப் பணிகள்”

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT