தொடர் விடுமுறையால் நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் திரண்ட சுற்றுலாப் பயணிகள். படம்: ஆர்.டி.சிவசங்கர் 
தமிழகம்

தொடர் விடுமுறையால் உதகையில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்

செய்திப்பிரிவு

பொங்கல் மற்றும் வார இறுதி விடுமுறையையொட்டி, நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 14-ம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு அதிக அளவில் வருகின்றனர். உதகையில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

உதகையில் உள்ள பெரும்பாலான தங்கும் விடுதிகளில் அறைகள் முழுமையாக நிரம்பியுள்ளன. அதேபோல வணிக மையங்களிலும், உணவகங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஏராளமானோர் சொந்த வாகனங்களிலும், சுற்றுலா வாகனங்களிலும் வந்துள்ளதால், உதகையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும்போது, ‘‘காணும் பொங்கல் தினத்தன்று மக்கள் பெருமளவு கூடுவார்கள் என்பதால், தமிழகத்தில் உள்ள பிற சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன.

நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக வரும் கூட்டம்தான். சுற்றுலாப் பயணிகள் கரோனா வழிமுறைகளை கடைப்பிடிக்கின்றனரா என்பதைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

SCROLL FOR NEXT