தூத்துக்குடி முத்தம்மாள் காலனி ராம்நகரில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பரிதவித்த மக்களுக்கு எஸ்பி ஜெயக்குமார் படகு வசதி ஏற்பாடு செய்து கொடுத்தார். அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக அப்படகில் செல்லும் மக்கள். 
தமிழகம்

வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு மக்கள் வெளியே சென்றுவர படகு வசதி: தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை

செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் வெள்ளம் சூழ்ந்து வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்த மக்கள் கடை வீதி மற்றும் இதர அலுவல்களுக்கு வெளியே சென்றுவர படகு மற்றும் வாகன வசதியை எஸ்பி ஜெயக்குமார் செய்து கொடுத்தார். இதையடுத்து அவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி ராம்நகரில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பரிதவித்த மக்களுக்கு எஸ்பி ஜெயக்குமார் படகு வசதி ஏற்பாடு செய்து கொடுத்தார். அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக அப்படகில் செல்லும் மக்கள். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் தூத்துக்குடி நகரின் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. முத்தம்மாள் காலனி ராம்நகர் பகுதியில் வீடுகளை சுற்றி இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வழியின்றி அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு, பேராபத்தில் சிக்கித் தவிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து எஸ்பி உடனடியாக அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மக்களின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவர் சங்கத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து மற்றும் ஆல்டிரின் ஆகியோர் உதவியுடன் சிறிய படகை ஏற்பாடு செய்து, ராம்நகர் பகுதிக்கு கொண்டுவரச் செய்தார். அந்த படகு மூலம் பொதுமக்கள் வெளியே செல்ல வசதி செய்து கொடுத்தார்.

மேலும், காவல்துறையின் பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 10 வீரர்களையும், வெள்ளம் குறையும் வரை அங்கேயே இருந்து அப்பகுதி மக்களுக்கு உதவுமாறு உத்தரவிட்டுள்ளார். அப்பகுதி மக்கள் தங்களுக்கு வாகன வசதி வேண்டும் என்று எஸ்பியிடம் கேட்டுக்கொண்டதன் பேரில், காவல்துறை வாகனம் ஒன்றை அங்கே நிறுத்தி அவர்களுக்கு உதவ காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

எஸ்பியின் இந்த நடவடிக் கையால் மகிழ்ச்சியடைந்த ராம்நகர் மக்கள் அவரை பாராட்டி நன்றி தெரிவித்தனர். இந் நிகழ்வின் போது தூத்துக்குடி நகர டிஎஸ்பி கணேஷ், இன்ஸ்பெக்டர் அருள்ராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT