ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல முயன்றபோது கன்டெய்னர் லாரி மோதிப் படுகாயமடைந்த ஆண்யானை சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தது. இதையடுத்துத் தூத்துக்குடியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
ஓசூர் வனச்சரகம் பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒற்றை ஆண் யானை ஒன்று சுற்றி வந்தபடி இருந்துள்ளது. இந்த ஆண்யானை 15-ம் தேதி இரவு 9.45 மணியளவில் பேரண்டப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல முயன்றபோது பெங்களூரு நகரில் இருந்து கிருஷ்ணகிரியை நோக்கிச் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆண்யானையை வனத்துறையினர் மீட்டு, அய்யூர் காப்புக்காட்டில் உள்ள சுவாமி ஏரிக்கரை அருகே சிகிச்சை அளித்து வந்தனர். மருத்துவக் குழுவில் ஓசூர் வனக்கோட்ட வனவிலங்குகள் மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான குழுவினரும், கர்நாடக மாநில வனத்துறையைச் சேர்ந்த மருத்துவர் அருண் தலைமையிலான குழுவினரும் இணைந்து, காயமடைந்த யானைக்த்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது கன்டெய்னர் லாரி மோதியதால் யானையின் உடலில் ஏற்பட்டுள்ள உள்காயங்களைக் கண்டறியும் வகையில் யானைக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில் யானையின் பின்பக்க வலது கால் எலும்பில் முறிவு இருப்பது உறுதியானது.
அதைத்தொடர்ந்து யானையின் கால் எலும்பு முறிவைச் சரிசெய்வதற்கான முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வனத்துறை மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி ஆண் யானை நேற்று உயிரிழந்தது. உயிரிழந்த யானையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அய்யூர் வனப்பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் பிரபு கூறும்போது, ’’கன்டெய்னர் லாரி மோதி ஆண் யானை உயிரிழந்தது தொடர்பாக வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு தூத்துக்குடியைச் சேர்ந்த அதியபெருமாள் மகன் லாரி ஓட்டுநர் சோலைமுத்து (35) கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்று தெரிவித்தார்.