தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்த வணிகர் நல வாரியம் செயலற்று முடங்கியுள்ளதால், வணிகர்கள் நலத்திட்ட உதவிகள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களின் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை விற்பனை செய்யும் முக்கிய தொழிலில் வணிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வணிகர்களில் பலர் நலிவுற்ற நிலையிலும், சாதாரண கடைகளை நடத்தி வருபவர்கள் ஏராளம்.
இதை கருத்தில் கொண்டு கடந்த 1990-ம் ஆண்டு வணிகர்களுக்கு தனி நல வாரியம் ஏற்படுத்தியது. இதற்காக வாரியத்துக்கு வங்கியில் ரூ.2 கோடி வைப்பு தொகை போட்டு, அதில் வரும் வட்டி மூலம் வாரியத்தை பராமரித்தும், வணிகர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியது.
இந்நிலையில், அதிமுக ஆட்சியில் இந்த வைப்பு தொகை உயர்த்தப்பட்டு ரூ.5 கோடி வைப்பு தொகை வங்கியில் செலுத்தியது. வாரியம் மூலம் நலிவுற்ற வணிகர்களின் குடும்ப குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவியாக ரூ.2 ஆயிரமும், மேல்கல்விக்கு ரூ.3 ஆயிரம், கல்லூரி பயிலும் குழந்தைகளுக்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது.
பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை பரிசு தொகை வழங்கப்பட்டது. மேலும், மாற்றுத் திறனாளி வணிகர்களுக்கு மூன்று சக்கர வாகனம், இயற்கை சேதம் மூலம் கடைகள் பாதிக்கப்பட்டால், தகுந்த நஷ்டஈடு தொகை, வியாபாரத்தின் போது உயிரிழக்கும் வணிகர்களின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கியது.
இந்நிலையில், வணிகர்கள் நல வாரியம் செயல்படுத்துவதற்கான குழு அமைக்காமல், தற்போது வாரிய செயல்பாடுகள் முடங்கி நலத்திட்ட உதவிகள் பெற முடியாமல் வணிகர்களின் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.
இதுகுறித்து சேலம் மாநகர அனைத்து வணிகர்கள் நலச்சங்க பொதுச் செயலாளர் ஏ.ஜெயசீலன் கூறியதாவது:
வணிகர்கள் நல வாரியம் ஏற்படுத்தப்பட்டு 25 ஆண்டுகளான நிலையில், வாரியம் மூலம் வணிகர்களும் அவர்களை சார்ந்த குடும்பத்தினரும் எவ்வித பலனையும் அனுபவிக்க முடியாத நிலையே உள்ளது.
வணிகவரித்துறையில் பதிவு செய்யப்பட்ட வணிகர்கள் மற்றும் உள்ளாட்சிகளில் தொழில்வரி செலுத்தும் வணிகர்கள் வாரியத்தில் உறுப்பினர்களாக சேரலாம். அனைவருக்கும் வாரிய உதவிகள் கிடைத்த நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு முதல் வணிகவரி செலுத்துவோருக்கு நல உதவிகள் நிறுத்தப்பட்டன.
இதனால், 5.5 லட்சம் பேர் வணிகர்களும் அவர்களை சார்ந்த 16 லட்சம் குடும்ப உறுப்பினர்கள் இருந்தும் வாரியத்தின் செயல்பாடற்ற நிலையால் 60 ஆயிரம் பேர் மட்டுமே உறுப்பினராக உள்ளனர். நல உதவிகள் கிடைக்காததால் உறுப்பினர்களாக சேர யாரும் முன்வரவில்லை.
வாரியத்தை செயல்படுத்த கடந்த நான்கரை ஆண்டாக குழு அமைக்காத காரணத்தால், வாரியம் முடங்கியுள்ளது. இதனால், நலஉதவிகளை பெற முடியாமல் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, முடங்கியுள்ள வணிகர்கள் நல வாரியத்தை மீண்டும் செயல்படுத்த குழு அமைக்க அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.