பிரதமரை நேரில் சந்தித்து தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை கேட்டுப் பெறுவதற்காக முதல்வர் பழனிசாமி இன்று (ஜன.18) டெல்லி செல்கிறார்.
கரோனா பரவல் தடுப்புக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக மாநில அரசின் நிதியில் இருந்து ரூ.7,500 கோடிக்கு மேல்ஒதுக்கீடு செய்து செலவினங்களை செய்துள்ளது. இதையடுத்து, கரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய அரசு சார்பில் சிறப்பு நிதியாக ரூ.9,000 கோடி ஒதுக்கீடுசெய்ய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. சமீபத்தில் நடந்த காணொலிக் காட்சி கூட்டத்திலும் பிரதமரிடம் இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வலியுறுத்தினார். ஆனால், கரோனா சிறப்பு நிதி இதுவரை கிடைக்கவில்லை.
இதுதவிர அத்திக்கடவு - அவிநாசி, கோதாவரி - காவிரி உட்படபல்வேறு நீர்வள திட்டப் பணிகளுக்கு அனுமதியும், நிதியும்தமிழக அரசால் கோரப்பட்டிருந்தது.
அதேபோல, நிவர், புரெவி புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் நிவாரணம் கேட்கப்பட்டது. மத்திய குழுவினர் நேரில் வந்து புயல் பாதிப்புகளை பார்வையிட்டு சென்ற பிறகும் இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில், பல்வேறு திட்டங்களுக்காக தமிழக அரசு கோரியுள்ள நிதியை விரைவாக கேட்டுப் பெறும் விதமாக முதல்வர் பழனிசாமி இன்று (ஜன.18) காலை 11.30 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
மாலை டெல்லி சென்றடையும் அவர், தமிழ்நாடு இல்லத்தில் இரவு தங்குகிறார்.
நாளை திரும்புகிறார்
பின்னர், பிரதமர் நரேந்திர மோடியை நாளை (ஜன.19) சந்தித்து நிதி கோரிக்கைகள் தொடர்பாக பேச உள்ளார். இப்பணிகள் முடிந்ததும் நாளை மாலையே முதல்வர் தமிழகம் திரும்புவதாக கூறப்படுகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை திறந்துவைக்கக் கோரி பிரதமரை முதல்வர் பழனிசாமி சந்திக்க உள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து, நிதி விவகாரம் தொடர்பாகவே இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக தமிழக அரசு சார்பில் கூறப்படுகிறது.